http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 5
இதழ் 5 [ டிஸம்பர் 15, 2005- ஜனவரி 14, 2005 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
கல்வெட்டாய்வு
சென்ற மாதம் கொடுக்கப்பட்டக் கல்வெட்டு வரிகளுக்கானப் பொருள் விளக்கத்தை, வரலாறு இதழ் 2 இல் உள்ள டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்களின் "உடையாளூரில் பள்ளிப்படையா" என்ற கட்டுரையில் காணலாம். கல்வெட்டின் பொருளைத் திரித்து அல்லது சரியானபடி புரிந்துகொள்ளாததால் விளைந்த குழப்பத்தையும், கல்வெட்டின் சரியான பொருளும் அக்கட்டுரையில் விளக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது.
கல்வெட்டுச் செய்தியினை சரியானபடிப் புரிந்துகொள்ளும் அவசியத்தை அந்தக் கட்டுரையைப் படித்தப் பிறகு உணர்ந்திருப்பீர்கள். சரி இந்த மாதம் சில கல்வெட்டுகளையும், கல்வெட்டுகள் மூலம் நமக்குக் கிடைக்கும் சில தகவல்களைப் பற்றியும் காணலாம். இப்படிக் கல்வெட்டுக்களைப் படிப்பது, நீங்கள் கோயில்களுக்குச் சென்றுக் கல்வெட்டு படிக்கும் பொழுது எழுத்துகளைச் சேர்த்துச் சொற்றொடர்களாக்குவதற்கும், அக்கல்வெட்டுச் செய்தியினைப் புரிந்துகொள்வதற்கும் மிகவும் பயன்படும். குழந்தைகளுக்கு முதன்முதலில் சோறூட்டுவது, ஒரு விழாவாக இறைவனுக்கு அமுது படைத்து கொண்டாடுவது பல குடும்பங்களில் பழக்கமாக உள்ளது. இப்பழக்கம் ஆயிரமாண்டுகளுக்கும் மேலாக இச்சமுதாயத்தில் இருந்து வந்துள்ளது என்பதை கீழுள்ள முதற் பராந்தகன் காலக் கல்வெட்டின் மூலமாக அறிகிறோம். 1 ஸ்வஸ்திஸ்ர் _ _ _ _ ஆதித்தம் பூதியேன் என் மகன் பூதி பராந்தகன் அந்நப்ராயஞ் செ[ய்]கின்ற இடத்து தக்ஷிணையாக பிரமதேயம் ஈசான ம 2 ங்கலத்து _ _ _ _ ம் உடும்போடி ஆமை தவழ்ந்தது எப்பேர்ப்பட்ட நிலமு முண்ணிலம் ஒழிவின்றி குடி நீக்கிய தேவதானமாக நீரோடு அட்டி இறையி 3 லி சந்திராதி _ _ _ _ படி திருவமிதுக்கு பதக்காறு குத்தல் பழவரிசி சிறுகாலைக்கும் உச்சம் போதைக்கும் ஆக சூல நாழியால் பதின[¡]று நாழிக்கு நிசதி நெல் ஐங்குறுணி இருநாழி உரியா 4 ழாக்கான ப[டி] _ _ _ _ கலனே இரு தூணிப் பதக்கினால் நிலம் ஒன்றரையே யொருமா முக்காணி அரைக் காணி முந்திரிகையும் தூப்பருப்பு நாழிக்கு நெல் நானாழியும் நெய்யமிது 5 முழ[¡]க்கி _ _ _ _ க்கு நெல் அறு நாழியும் காயத்துக்கும் உப்புக்கும் புளிகும் நெல் முன்னாழியும் தயிரமிது போது நாழியானபடி முன்னாழியால் நெல் குறுணி ஒரு நாழியும் ஆக 6 நிசதி _ _ _ _னே முக்குறுணியால் நிலம் இரண்டேய் ஒரு மாக்காணியும் கணவதியார்க்கு நிசதிப்படி அப்பம் அமிது செய்ய அரிசிக்கு நெல் முன்னாழியும் நெய் யாழாக்குக்கு நெல் முன்னாழியும் சர்க்கரை இரு பலத்துக்கு நெல் இருநாழியும் ஆக இப்பரமெச்வரருடைய கணவதியார்க்கு நிசதி குறுணியானபடி ஆண்டுவரை முப்பதின் கலத்தா 7 - - - - - - - ம் முக்குறுணி முந்திரிகையால் நெல் நால்க்கலனே அறு நாழியுமாக நெல் நானூற்றுக் கலத்துக்கும் நிலம் நால் வேலியும் சூல காலால் வேலி நூற்றுக் கல வரிசையால் என் மகன் பூதி பராந்தகன் அன்ன பிராயஞ் செய்த நான்று இ* (* கல்வெட்டின் இறுதிவரிகள் கட்டிடப் பகுதியில் சிக்கியுள்ளதால் அறியக்கூடவில்லை.) மேலே கொடுக்கப்பட்டுள்ளக் கல்வெட்டு திருச்சிராபள்ளிக்கருகில் உள்ள திருச்செந்துறையில் இருக்கும் சந்திரசேகரர் திருக்கோயிலில் கருவறை உள் மண்டப ஜகதியில் காணப்படுகிறது. கல்வெட்டுச் செய்தியாவது ஆதித்தம் பூதி என்பவர் அவர் மகனுக்கு அன்னபிராயம் செய்த நாளில் திருச்செந்துறை திருக்கோயில் இறைவனுக்கும், பிள்ளையாருக்கும் (கல்வெட்டில் ஆறாவது வரியில் கணவதியார்க்கு என்று குறிக்கப்பட்டுள்ளது) திருஅமுதுக்கும், வழிபாட்டிற்கும் நிலங்களை கொடையாக (கல்வெட்டில் இரண்டாவது வரியில் தேவதானமாக என்று குறிக்கப்பட்டுள்ளது) வழங்கியுள்ளார். நிலத்திலிருந்து பெறப்படும் நெல் எவ்வாறு பயன்பட வேண்டுமென இக்கல்வெட்டில் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. சிறுகாலைக்கும் உச்சிப்பொழுதுக்கும் (காலை மற்றும் உச்சிக்கால பூஜைகளுக்கு) தேவையான நெய்யமுது, தயிரமுது ஆகியவற்றிற்கும், அப்பம் செய்ய தேவையான பருப்பு, உப்பு, சர்க்கரை இவற்றிற்கும், தேவையான நெல் உரி மற்றும் நாழியளவால் குறிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாம் உபயோகிக்கும் ஆழாக்கு என்ற அளவையும் உரியாழாக்கு (உரி + ஆழாக்கு) என்று 3 மற்றும் 4 ம் வரிகளில் குறிக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளிக்கு அருகில் இருக்கும் கீழப்பழுவூரில் உள்ள ஆலந்துறையார் கோயிலில் இரண்டாம் திருச்சுற்றின் கிழக்குச் சுவரில் இருக்கும் கல்வெட்டில் (கீழே கொடுக்கப்பட்டுள்ளது) கோல் எறிதல் பற்றிய குறிப்பு வருகிறது. 1 ஸ்வஸ்திஸ்ர் கோப்பரகேசரிபற்மரான திரிபுவனச் சக்ரவ[ர்த்திகள் விக்]கிரம சோழ தேவர்க்கு யாண்டு ஒன்பதாவது வடகரை ராஜேந்த்ர ஸிம்ஹ வளநாட்டு 2 மேல் காரைக் காட்டுச் செந்நிவலக் கூற்றத்து மிறை நாடாழ்வ - - - - - யில்லிருக்கும் சூநிமாந் நரையன் ஒத்த(ந்)னான வேசாலி நாடாழ்வாநேந் இந்நா 3 ட்டுத் தழும்ப(ந்)நூர் இருக்கும் பட்டந் தேவநான திருச்சிற்றம் - - - - - கொலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு முப்பத்தெட்டாவது எங்கள் சூநிமா 4 ந் பகையில் நாங்கள் எய்யா நிற்க இடையே கைய் பிழையாலிவ் - - - - - கோல் பட்டுப் பட்டமையில் இந்நாட்டுப் பள்ளி நாட்டார் எந் மேலே பகையிட்டமையில் 5 இந்தப் பகை தீர இந்நாட்டு பள்ளி நாட்டாரும் சூநிமாந் நாட்டாரும்கூட இருந்து காணாக் கோல் பட்டு கைப் பிழையால்(ப்) பட்டமையில் இவனைச் சாத்தி ஒரு திருநுந்தா விள 6 க்கு கொள்க வெந்று சூநிமாந் நாட்டார் சொல்ல பள்ளி நாட்டாரும் ஸம்மதித்த - - - - - விளக்கொன்றுக்கும் வடகரை உத்தொங்க தொங்க வளநாட்டு குந்றக் கூற்றத்து ப்ரஹ்மதே 7 யம் சிறுபழுவூர்த் திருவாலந்துறை உடைய மஹாதேவற்(க்)கு வைப்பதெந்று - - - - - ஸம்மதித்தமையில் வைச்ச நுந்தா விளக்கொந்றுக்கும் பசு முப்பத்திரண்டும் சூநி 8 மாந் அரையந் ஒத்த(ந்)நாந வேசாலி நாடாழ்வாந் நடைதர பள்ளி நா[டாழ்வான் சந்திராதி]தவர் இரவு பக(ல்)லெரிய விட்டமைக்கும் இப்பசு முப்பத்திரண்டும் இக்கோ 9 யில் காணியுடைய சிவப்பிராமணரோம் கைக்கொண்டு எரி - - - - - - [வி]ளக்கொந்று இது பந்மாஹேச்வர ரக்ஷை. காலம்: விக்கரம சோழர், கி.பி. 1127 செய்தி: முதலாம் குலோத்துங்கனின் முப்பத்தெட்டாம் ஆட்சியாண்டில் சூநிமாந் நாட்டாரைச் சேர்ந்த சூநிமான் அரையன் ஒத்தனான வேசாலி நாடாழ்வானும், பள்ளி நாட்டாரைச் சேர்ந்த தழும்பனூர் பட்டன் தேவனான திருச்சிற்றம்பலனும் கோல் எறிந்து கொண்டிருந்தபொழுது, கைத் தவறுதலாகக் கோல் பட்டு பட்டன் தேவன் இறந்துவிட (பட்டமையில் என்று 5வது வரியில் குறிக்கப்பட்டுள்ளது), இருநாட்டாருக்குமிடையே பகை மூண்டுவிட்டது. இறந்தவன் நினைவாக கோயிலில் நந்தா விளக்கொன்று எரிப்பதாக சூநிமான் நாட்டார் கூற, அதைப் பள்ளி நாட்டார் ஏற்றுக் கொண்டபின், வேசாலி நாடாழ்வான் விளக்கெரிக்க முப்பத்திரண்டு பசுக்களைக் கோயிலாரிடம் கொடையாகத் தந்தான். பகையும் தீர்ந்தது. அரசர்களும், அரச குடும்பத்தை சார்ந்தவர்களும் இறந்துவிட்டால், அவர்களுக்காகப் பள்ளிப்படைக் கோயில் எழுப்புவார்கள் என்பது கல்வெட்டுகளின் மூலம் நமக்குத் தெரிந்த செய்தி. அதேபோல் அரசகுடும்பம் அல்லாதவர்களிடையேயும் இறந்தவர்களுக்காக சமாதிக் கோயில் எழுப்பும் வழக்கம் இருந்தது கீழே கொடுக்கப்பட்டுள்ளக் கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது. வ.உ.சிதம்பரனார் மாவட்டம், விளாத்திகுளம் வட்டத்திலுள்ள சோழபுரத்தில், சுடலை மாடசாமி கோயில் என்று இன்று வழங்கப்படும் அணைந்தான் கோயிலின் முன் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கல்லில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. 1 - - - - - - - - ல்லன் 2 குடியான உ[த்த]ம சோழபு 3 ரத்து நகரத்தார் பக்கல் இவ் 4 வூர்ப் பரிக்கிரகத்துத் தே§ 5 வந்திர வல்லனங்கக்க 6 ¡றரில் கொற்றன் குடியனா 7 ன கலங்காத கண்டப் பேரைய 8 னேன் என் மகன் குறுமன் இர 9 ட்டை இ[ஜன்ம] மொழிய இவனுக் 10 கு ஸமாப்தியாக* இவனை நோ 11 க்கி சிலை ஏத்தினப்படி சந் 12 திராதித்தவரை பூசை செல் 13 லக் கொண்டிட்ட கருஞ்செய் நில 14 மாவது இந்நகரத்துக் கீழ் கா 15 னத்துக் கருஞ்செய்யில் விலை 16 கொண்டி[ட்]ட நிலம் ந** நாலுமா 17 வுக்குச் சூழெல்லைக்குக் கீ¦ 18 ழல்லை தேவனுடையான் ப 19 ற்றுக்கு மேற்கும் தென்னெ 20 ல்லை விராடராயனும் பட்டி 21 ன சுவாமிகளும் பற்றுக்கு வட 22 க்கும் மேலெல்லை அவனி மண்ட 23 லராயன் முழக்கு கிழக்கும் வ 24 டவெல்லை பெருங்குளத்து எல்லைக் 25 குத் தெற்கும் இந்நான் கெல்லை 26 க்குள் பதின் அறு சான் கோலால் நி 27 லம் நாலுமாவும் இறையிலி § 28 தவதானமாக குடுத்தமைக்கு யி¨ 29 வ அரியான் வேளானான பட்டின சு 30 வாமிகள் எழுத்து இவை - - - 31 வீரனான குணம் வேண்டி நல்லூர் 32 மூவேந்த வேளான் எழுத்து இ¨ 33 வ தேவன் தனியனான வானவதர 34 யன் எழுத்து இவை அரங்கன் 35 இராகனான வில்லவன் விழுப்ப 36 ரயன் எழுத்து இவை [த]னியன் 37 சங்கனான திருச்சிற்றம்பல மூவே 38 ந்த வேளான் எழுத்து இவை மிப் 39 பன் நாசகனான - - - ராயன் எ 40 ழுத்து இவை - - - - - - 41 - - - - கனான உத்தம சோழ மூவேந்த வேளான் எழுத்து 42 இவை சீலான் சங்கனான சம்பந்தப் பெருமாள் எழுத்து 43 - - - ஆசாரியன் எழுத்து உதிதிது இவ்வனைவருஞ் சொல்ல இவ் எழுத்து வெட்டினேன் ஆத 44 னூரான உதைய மாத்தாண்ட நல்லூர் தச்சாசாரியன் தேவன் கொற்றன் குளத்தூரா- - - -. * சமாப்தி (முடிவு) என்ற சொல் சமாதி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதெனலாம். ** நான்கு மா என்பதற்கான குறியீடு. காலம்: கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி செய்தி: உத்தம சோழபுரத்துப் பரிக்கிரகத்தைச் (சபையை) சேர்ந்த அங்கக்காரர்களில் (களரி பயிற்றுவிக்கும் வீரர்களில்) ஒருவர், இறந்து போன தன் மகனுக்குச் சமாதிக் கோயில் எழுப்பி, அதற்கு இறையிலி தேவதானமாக நிலமளித்துள்ளார். கருஞ்செய் என்பது கரிசல் நிலத்தைக் குறிக்கும். 26வது வரியில் நிலத்தை அளக்கப் பயன்பட்ட பதினாறு சாண் கோல் பற்றிய குறிப்பு உள்ளது. நிலங்கள் 'மாவு' என்ற அளவினால் குறிக்கப்படுகின்றன. மேலும் நில எல்லைகள் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. 28வது வரியிலிருந்து வரும் "இவை இன்னார் எழுத்து" கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள பெயருடையோர் இந்தக் கொடைக்கு சாட்சியாய் இருந்ததைக் குறிக்கின்றது. இப்படியாக பிறப்பு முதல் இறப்பு வரையும் அதன் பிறகும் நம் சமுதாயத்தில் நிலவிய பழக்க வழக்கங்கள் பலவற்றை கல்வெட்டுகள் மூலமாக அறியமுடிகிறது. சரி , கீழே கொடுக்கப்பட்டுள்ளது இராஜராஜீஸ்வரம் கோயிலிலுள்ள திருச்சுற்று மாளிகையில் மேற்குப் புறத்திலிருக்கும் தூணில் உள்ள கல்வெட்டு. தூணின் இரு புரங்களில் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டைப் படிப்பதற்கு எளிதாக ஒரே புகைப்படமாக மாற்றிக் கொடுத்திருக்கிறோம். படிக்க முடிகிறதாவென்று பாருங்கள். இக்கல்வெட்டில் 6வது வரியில் வரும் : (Colon) வரை கிரந்தச் சொற்கள் உள்ளன. படிப்பது கடினமாகையால் அதற்குப் பிறகு வரும் தமிழ் சொற்களைப் படித்துவிட்டு பின்னூட்டப்பகுதியிலிடுங்கள். அடுத்த இதழில் சரிபார்த்துக்கொள்ளலாம். இந்தக் கல்வெட்டைப் படிக்க முயன்று பாருங்கள் பி.கு - இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுத் தகவல்கள் அனைத்தும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையம் வெளியிடும் "வரலாறு" அரையாண்டு ஆய்விதழ்களிலிருந்து பெறப்பட்டவை.this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |