http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 5

இதழ் 5
[ டிஸம்பர் 15, 2005- ஜனவரி 14, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

தவறுகளைத் தவிர்ப்போம்
மத்தவிலாசப் பிரகசனம் - 3
இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழ் - ஒரு அறிவிப்பு
ஸ்ரீபுறக்குடிப்பள்ளி
கல்வெட்டாய்வு - 4
கட்டடக்கலை ஆய்வு - 5
வைஷ்ணவ மாகேசுவரம்
இராஜசிம்மன் இரதம்
Political history of Thirutthavatthurai and it"s neighbourhood
எம்.எஸ் - ஒரு வரலாற்றுப் பதிவு
சங்கச்சாரல் - 5
கோச்செங்கணான் யார் - 3
இதழ் எண். 5 > கலையும் ஆய்வும்
வைஷ்ணவ மாகேசுவரம்
மு. நளினி
புதுக்கோட்டைத் திருப்புத்தூர்ச் சாலையில் புதுக்கோட்டையிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருமெய்யம். இவ்வூரிலுள்ள குன்றில் சிவபெருமானுக்கிரண்டும் விஷ்ணுவுக்கொன்றுமாக மூன்று குடைவரைகள் அகழப்பட்டுள்ளன. கீழுள்ள குடைவரைகளில் சத்யகிரீசுவரரென்று சிவபெருமானும் பள்ளிகொண்டருளின ஆழ்வாரென்று விஷ்ணுவும் அழைக்கப்படுகின்றனர். மேலுள்ள மூன்றாம் குடைவரை இறைவனின் பெயரைக் கல்வெட்டுகள் இல்லாமையால் அறியக்கூடவில்லை. இம்மூன்று குடைவரைகளும் ஒரே குன்றில் அகழப்பட்டிருந்தாலும், கீழுள்ள இரண்டும் கனமான மதிற்சுவரால் இருவேறு கோயில்களாகப் பிரிக்கப்பட்டுத் தனித்தனிக் கோபுரவாயில்களைப் பெற்றுள்ளன. அகழப்பட்டபோதே இப்பிரிவினை நேர்ந்துவிட்டதா அல்லது காலப்போக்கில் நிகழ்ந்த மாறுதலா என்று அறிய விரும்புவோர்க்கு, மெய்யத்துக் கோயிற் கல்வெட்டுகள் வரலாறு தருகின்றன. வெட்டப்பட்ட காலத்தில், 'சமயப்பொறை' நோக்குடன் அருகருகே தோற்றுவிக்கப்பட்ட இக்குடைவரைகளில் திருமெய்யத்து மகாதேவராய்ச் சிவபெருமானும் கண்மலர்ந்தருளின எம்பெருமானாய் விஷ்ணுவும் மெய்யத்து மக்களால் அன்போடு வணங்கப்பட்டனர்.

குடைவரைகளின் அமைப்பும் இவ்வளாகத்துள்ள கல்வெட்டுகள் இரண்டும் இக்குடைவரைகள் ஏழாம் நூற்றாண்டின என்று கட்டியம் கூறுகின்றன. இந்த ஏழாம் நூற்றாண்டுப் பதிவுகளுக்குப் பிறகு, இவ்வளாகத்தில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டுகளுள் முத்தரையர் கல்வெட்டு ஒன்று தவிர ஏனைய அனைத்துமே பிற்பாண்டியர் காலத்தனவாக இருப்பதன் பின்புலம் தெரியவில்லை. ஏறத்தாழ நந்நான்கு நூற்றாண்டுகள் தமிழ்நாட்டையாண்ட பல்லவர்களும் சோழர்களும் திருமெய்யத்தின்பால் பாராமுகமாக இருந்தது ஏனென்று தெரியவில்லை. பக்கத்திலுள்ள கோகர்ணம், மலையக்கோயில், திருத்தளிநாதர் எனப் பெரும்பாலான கோயில்களில் சோழர் கல்வெட்டுகள் இருக்க, மெய்யம் மட்டும் தனித்துவிடப்பட்டமைக்கான காரணத்தை ஆராய வேண்டியுள்ளது.

பல்லவ, சோழர் பார்வை படாமையால், தோற்றக்காலந்தொட்டு, பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை இவ்விரு கோயில்களும் எப்படி வளர்ந்தன, இங்கு நிர்வாகம் எப்படியிருந்தது என்பனவெல்லாம் வெளிச்சம் காணா விந்தைகளாகவே போயின. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னனாய்த் திட்டமிடப்பட்டிருந்தும் நெறியான வழிகாட்டல் இல்லாமல் போனதால் பூசல்கள் முற்றிச் சச்சரவுகளாகிச் சங்கடங்களாய் மலர்ந்து, வழிபாடே நின்ற நிலையும், இந்நிலை பலப்பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்த வேதனையும் மெய்யத்தின் சாதனை வரலாறாய்ப் பதிவானது. கி.பி. 1245ல்தான் விடியல் வந்தது.

ஒய்சளர் ஆட்சியும் பாண்டியர் ஆட்சியும் கைகோத்திருந்த பதின்மூன்றாம் நூற்றாண்டில் கர்நாடகத்திலிருந்து படையெடுத்து வந்து தமிழ்நாட்டை வென்றடக்கிய வீரசோமேசுவரனை 'மாமடிகள்' என்று மரியாதையோடு வணங்கி உறவுகொண்டாடிய பாண்டிய மன்னர் மாறவர்மர் சுந்தரபாண்டியரின் ஏழாம் ஆட்சியாண்டில், திருமெய்யத்தை உள்ளடக்கியிருந்த கானநாட்டைக் கைப்பற்றி வெற்றிகண்ட ரவிதேவர் தண்டநாயக்கர், அவரது மைத்துனர் அப்பண்ண தண்டநாயக்கர் முன்னிலையில், அதுநாள்வரை இருகோயில் நிர்வாகப் பூசல்களையும் சகித்துக்கொண்டிருந்த விருதராஜபயங்கர வளநாட்டு நாடுகளும் நகரங்களும் கிராமங்களும் கூடி ஓர் ஒப்பந்தத்தை நிறைவேற்றின. பதின்மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நிகழ்ந்த இந்த இருகோயில் நிர்வாக ஒப்பந்தமே, 'வைஷ்ணவ மாகேசுவரமென்று' இங்குள்ள கல்வெட்டொன்றில் பெருமையுடன் சுட்டப்பெறுகிறது. காலங்கெட்டு நிகழ்ந்தபோதும் கருத்தோடு நிறைவேற்றப்பட்ட இவ்வொப்பந்தத்திற்கு ரவிதேவ தண்டநாயக்கரே காரணி போலும். ஐம்பத்திரண்டு வரிகளில் வெட்டப்பட்டுள்ள இக்கூட்டம் பற்றிய கல்வெட்டில் கூட்டத்தார் வண்ணனை நான்கு வரிகளில் முடிந்து விடுகிறது.

திருமெய்யத்தை உள்ளடக்கியிருந்த கானநாடான விருதராஜபயங்கர வளநாட்டைச் சேர்ந்த நாடுகள், நகரங்கள், கிராமங்களின் ஆட்சிக்குழுவினர், சமயமந்திரிகள், அரையர்கள், இது சைவ, வைணவக் கோயில்களுக்கிடையேயான சிக்கலென்பதால் கானநாட்டுச் சைவர்கள், வைணவர்கள், பாண்டியராட்சி நடந்ததால், பாண்டிநாட்டு நல்லதறியும் பெருமாள் இராவண முதலியார், கானநாட்டுக் கோயில்வாசன் பிச்சமுதலியார் ஆகியோர் கூட்டத்தில் இடம்பெற்றனர். சைவர்கள் பக்கம் பேசத் திருங்கொடுங்குன்ற சைவாச்சாரியார்கள் வந்து சேர்ந்தனர். வைணவர்களுக்கு வாதாட கானநாட்டின் வைணவ அநுசந்தானமாக இருந்த திருக்கோட்டியூர்ப் பதினெட்டு மண்டலத்துக்குச் சமைந்த பாரத்வாசிநாராயணன் ஸ்ர்குமாரபட்டனான உடையார் திருப்பாணதாதரை வரவழைத்தனர். இவ்வளவு பேரும் திரண்டு நின்ற திருமெய்யக் கூட்டத்தில், சிவன், பெருமாள் கோயில் நிர்வாகிகளும் ஒருபுறம் கூடியிருந்தனர். இக்கூட்டத்தைக் கூட்டியவரும், போரில் கானநாட்டைக் கைப்பற்றியவருமான ரவிதேவ தண்டநாயக்கரும் அவர் மைத்துனர் அப்பண்ண தண்டநாயக்கரும் இப்பெருங்கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.

'என்ன சிக்கல்? ஏன் பூசைகள் தடைப்பட்டன?' எனக் கேள்விக் கணைகள் பிறந்தன. 'இரண்டு கோயில்களுக்கும் வருவாய் பொதுவாக இருந்ததால், எப்படிப் பங்கிட்டுக் கொள்வது என்பதில் சிக்கல். நாட்டு வினியோகமுமாக முதல்கள் அழிந்தன. பூசையும் ஆராதனையும் நின்று போயின' என்று நிர்வாகம் பதிலளிக்க, கணக்குக் கேட்கப்பட்டது. இரண்டு நிர்வாகக் குழுக்களிடமும் தீர விசாரிக்கப்பட்ட பின்னர் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. திருமெய்யத்துப் பெருங்கூட்டம் இருகோயில் நிர்வாக ஒப்புதலுடன் எடுத்த முடிவுகள், 'திருமெய்ய ஒப்பந்தம்' எனப்பெயர் சூட்டக்கூடிய அளவில் வைஷ்ணவ மாகேசுவரமாக வடிவெடுத்தன.

ஒப்பந்தத்தின் முதல் கூறாக வருவாய்த் திட்டமிடப்பட்டது. அதன்படி திருமெய்யத்திலும் அதற்கடங்கிய ஊர்களிலும் பயிரிட்ட நிலங்களின் விளைச்சலில் இருந்து கோயிற்கடமையாக வரவேண்டிய நெல், ஐந்து கூறுகளாகப் பிரிக்கப்பட்டு, மூன்று கூறுகள் விஷ்ணு கோயிலுக்கும் இரண்டு கூறுகள் சிவன் கோயிலுக்கும் என்று வரையறுக்கப்பட்டது. விஷ்ணு கோயிலுக்கும் திருமெய்யத்தில் இருந்த வானவன் மாதேவீசுவரம் எனும் வேறொரு சிவன் கோயிலுக்கும் இடையில் நிகழ்ந்த நிலப்பரிமாற்றம், ஒப்பந்தத்தின் இரண்டாம் கூறாகப் பேசப்பட்டது. இதன்படி வானவன் மாதேசுவரத்திற்குரிய மூன்று நிலத்துண்டுகளின் உரிமை விஷ்ணு கோயிலுக்கு மாற்றித் தரப்பட்டது. அதற்குப் பதிலாக விஷ்ணு கோயில் நிலத்துண்டுகள் சில வானவன் மாதேவீசுவரத்திற்கு உரிமம் மாற்றித் தரப்பட்டன.

இரண்டு கோயில் வளாகங்களையும் தனித்தனியே பிரிக்குமாறு, இரண்டிற்கும் நடுவில், அந்நாளில் வழக்கிலிருந்த தச்சன் முழக்கோலால் ஒரு முழம் கனத்தில் சுவரொன்று நெடுக எடுக்க முடிவு செய்யப்பட்டது. எங்கிருந்து, எப்படி, எதுவரை இச்சுவர் அமைதல் வேண்டுமெனவும் திட்டமிடப்பட்டது. அதற்காகும் செலவை இருகோயில் நிர்வாகமும் ஏற்பதென ஒப்புதலானது. மதில் சுவர் அமையும் வழியிலுள்ள மரங்களை வெட்ட அநுமதி வழங்கப்பட்டது.

ஒப்பந்தத்தின் நான்காம் கூறாக, இரண்டு கோயில்களுக்கும் நீர்நிலைகள் ஒதுக்கப்பட்டன. கோயில் வளாகத்தின் கிழக்கிலிருந்த சுனை விஷ்ணு கோயிலுக்கும், சிவன் கோயில் பலித்தளத்திற்கு மேற்கிலிருந்த கிணறு சிவன் கோயிலுக்கும் ஒதுக்கப்பட்டன. இந்நீர்நிலைகளில் தூர்வை வாங்கும்போது இருகோயில் நிர்வாகமும் கண்காணியிட்டு வாங்கவேண்டுமென்று முடிவுசெய்யப்பட்டது. தூர்வையின்போது அவ்வக்கோயில் இறைப்படிமங்களை அவ்வக்கோயில்களில் எழுந்தருளுவித்துக் கொள்ளலாம்.

அடுத்து, இரண்டு கோயில்களுக்குமான எல்லைகள் வரையறுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. ஊரிலிருந்த நிலப்பகுதியொன்று ஐந்து கூறுகளாக்கப்பட்டு, மூன்று கூறுகள் விஷ்ணு கோயிலுக்கும் இரண்டு கூறுகள் சிவன் கோயிலுக்குமாய்ப் பங்கிடப்பட்டன.

விஷ்ணு கோயில் தேவதானமாக இருந்த அண்டகுடியும் பெருந்துறையும் பழையபடியே அக்கோயிலுக்கு உரிமையாக்கப்பட்டன. இருகோயில் உவச்சர்களுக்கும் அண்டக்குடியில் அளிக்கப்பட்டிருந்த காணியுரிமை நீக்கப்பட்டது. அந்தந்தக் கோயிலார் அவரவருக்கு வேண்டும் வகையில் உவச்சர்களைப் பணியமர்த்தி அதற்கு அவரவர் பண்டாரத்தில் கணக்கிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இப்பொதுப் பிரிவினைகள், அறிவிப்புகள் தவிர, இரண்டு கோயில்களுக்கும் அந்தந்த கோயிலுக்கு உரியனவாக ஏற்கனவே தரப்பட்டிருந்தவையும், அநுபவிக்கப்பட்டு வருவனவும் பழநடை மாறாது அப்படியே தொடர்வதென ஒப்புக்கொள்ளப்பட்டது.

கானநாட்டாரும் அப்பண்ண தண்டநாயக்கரும் இருகோயிலார்க்கும் நீர்வார்த்துத் தந்த புதிய நிலக்கொடையும் இவ்வொப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது, இந்நிலம் கானநாட்டு ஊற்றியூரில் பிராமணர் விலைகொண்டு, வரியிறுக்க முடியாமல் நாட்டுப் பொதுவாக ஓலையெழுதிப்போன மேலைப்பாதி நிலமாகும்.

திருமெய்யத்தில் கி.பி. 1245ல் நிகழ்ந்த இந்த வைஷ்ணவ மாகேசுவரத்தின் இறுதிப் பகுதி மிக முக்கியமானது. இதில் இரண்டு கூறுகள் அடங்கியுள்ளன. இருகோயில் நிர்வாகமும், கோயிலுக்குரிய கல்வெட்டுகள் அடுத்தவர் கோயிலிலிருந்தால், அவற்றைப் படியெடுத்துத் தத்தம் கோயில் வளாக எல்லைக்குள் பதிவுசெய்து கொள்ளவேண்டுமென்பது முதல்கூறு. இரண்டாம் கூறு, இக்கோயில் வளாகத்திலிருந்த சில கல்வெட்டுகளை அழித்தமை பற்றியதாக அமைந்துள்ளது.

இதன்படி, சிவன்கோயில் திருவாசல் கீழ்ச்சுவரில் இவ்வூர்த் தலைமையரால் வெட்டப்பட்டிருந்த கல்வெட்டும், மேலருகிலிருந்த பாஷை தெரியாத கல்வெட்டும், பெருமாள் கோயில் முகமண்டபத்திருந்த மூவேந்த வேளார் நிவந்தக் கல்வெட்டும் அழிக்கப்பட்டன. இப்பகுதியைக் குறிக்கும்போது, 'பழங்கல்வெட்டுகளை அழிப்பதான கல்வெட்டு' என்று தலைப்பிட்டுப் பேசுகிறது இவ்வொப்பந்த ஆவணம். இந்தக் கூட்டம் அழித்த மூன்று கல்வெட்டுகளுள், 'பாஷை தெரியாத கல்வெட்டு' திருமெய்யம் சிவன் குடைவரையின் தென்சுவரிலிருந்த பழமை வாய்ந்த இசைக்கல்வெட்டாகும். குடுமியான்மலையில் அமைந்துள்ளாற் போன்றதோர் அற்புதமான இசைக்கல்வெட்டைத் திருமெய்யமும் கொண்டிருந்தது. அதைத்தான் பாஷைபுரியாத கல்வெட்டென்று தீர்மானித்து ஒப்பந்தம் செய்து அறவே அழித்து, அந்தப் பாறைச் சுவரில் தங்கள் 'வைஷ்ணவ மாகேசுவரத்தை' நுணுக்கி நுணுக்கிச் செதுக்கியுள்ளனர் இக்கூட்டத்தார்.

இந்த ஒப்பந்தம் ஓரிடத்தில் இருந்தால் போதாதென்று கருதியோ என்னவோ இதன் பிரதியொன்றை மற்றொரு பாறைச் சரிவிலும் செதுக்கி வைத்தனர். ஐம்பத்திரண்டு வரிகளில் உள்ள இந்த வைஷ்ணவ மாகேசுவரத்தின் கையெழுத்தாளர்கள் நாற்பது பேர். இவர்களுள் ரவிதேவரும் அப்பண்ணரும் அடக்கம்.

இந்த வைஷ்ணவ மாகேசுவரத்துடன் சிக்கல் தீரவில்லை. குடைவரைக் கோயிலின் தென்புறப் பாறையிலுள்ள மாறவர்மர் சுந்தரபாண்டியரின் பத்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, இருகோயில் நிர்வாகத்திற்கிடையேயும் தொடர்ந்த குழப்பங்களுக்கு வெளிச்சம் காட்டுகிறது. திருமெய்யத்துள் அடங்கிய அதன் தென் பகுதியாக இருந்த பாப்பார வயலில், கருமாணிக்கப் பல்லவதரையர் அநுபவித்து, இறைகட்ட முடியாமல் ஊர்ப்பொதுவாகப் போகவிட்ட நிலத்திலும் சிவபிராமணர் ஊர்ப்பொதுவாகப் போகவிட்ட நிலத்திலும் திருத்தின பகுதியில், எட்டு மா அளவு நிலத்தைத் திருமெய்யத்துச் சிவன் கோயில் இசைக்கலைஞர்களுக்கு இறையிலி உவச்சக் காரணியாக அளிக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இம்முடிவை நிறைவேற்றும் பொறுப்பிலிருந்த திருவேங்கடத்து நம்பியான செந்தாமரைக் கண்ணன் அதைச் செய்யவில்லை. இதனால் சினமுற்ற சிவன் கோயிலார், முன்பு கூடிப் பூசலைத் தீர்த்துவைத்த நாடு, நகர, கிராம ஆட்சியர்களிடம் முறையிட, அவர்கள் விசாரித்து, முறையீட்டில் உண்மையிருப்பது உணர்ந்து, திருமெய்யத்து சபையாரை அழைத்து, நடந்தது விளக்கி, உடன் எட்டு மா நிலத்தை சிவன் கோயில் உவச்சர்க்கு ஊர்க்கீழ் இறையிலிக் காராண்மையாக அளிக்குமாறு வேண்டினர்.

சபை உடன் கூடி நடவடிக்கை எடுத்தது. பாப்பார வயலின் ஊர்ப்பொதுவான பகுதியில் இருந்த மாவடுச்செய், இத்தித்துடவை, உலகலங்கார வயக்கல். ஸ்ர்தேவி வயக்கல், நெடுங்கண் நிலம், களச்செய், அளற்றுக்கரியான் துடவல், கரைக்கீழ்ச்செய், இலைச்செய், உமைநங்கை வயக்கல், காஞ்சிரஞ்செய், தோரான் வயக்கல், வள்ளுவன் துடவல் எனும் நிலத்துண்டுகளும் அவற்றிலிருந்த நீர்நிலைகளும் எட்டு மா எனக் கணக்கிடப்பட்டு மெய்யத்துச் சிவன் கோயில் உவச்சர்க்கு ஊர்க்கீழ் இறையிலி காராண்மையாக அளிக்கப்பட்டு ஆவணம் வழி உறுதிப்படுத்தப்பட்டன.

மெய்யத்துக் கோயில் வளாகத்தில் காணப்படும் இம்மூன்று கல்வெட்டுகள் விரித்துரைக்கும் வைஷ்ணவ மாகேசுவரமும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த உவச்சக் காணியளிப்பும் பதின்மூன்றாம் நூற்றாண்டு 'வழக்கு-தீர்வு' பற்றிய தெளிவான அறிமுகத்தைத் தருவதுடன், சைவ, வைணவக் காழ்ப்பு நிலையின் பரிமாணங்களையும் படம்பிடிக்கின்றன.this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.