http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 56

இதழ் 56
[ ஃபிப்ரவரி 24 - மார்ச் 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

என்று திருந்தும் எங்கள் தமிழ்ச் சமூகம்?
புவனேசுவர விளக்கு
Elephant - The War Machine
திரும்பிப்பார்க்கிறோம் - 28
திருத்தங்கல் குடைவரை
கங்கையின் மறுவீட்டில் - ஒரு நாட்குறிப்பு - 2
தனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 3
அழகி
அவர் - பகுதி 8
Thirumeyyam - 3
Silpi's Corner-08
அவர் இல்லாத இந்த இடம் . . .
வடமொழிக் கல்வெட்டுக்கள் – 1
தசரூபகத்தில் நாட்டியம்
SMS எம்டன் 22-09-1914
இதழ் எண். 56 > இலக்கியச் சுவை
தசரூபகத்தில் நாட்டியம்
க.சங்கரநாராயணன்
விலங்கினத்தைக் காட்டிலும் பகுத்தறிவால் தனித்துச் சிறந்த மாந்தரினம் மனத்தின் வளமையால் கலை பல வளர்த்தது. எண்ணத்தை வெளிக்கொணர மொழியென்னும் ஊடகம் உருவாகிய பின்னர் அதனை ஆதாரமாகக் கொண்டு எத்துணையோ கலைப் பண்பாட்டுச் சின்னங்கள் உருவாயின. அத்தகைய கலைகளில் ஒன்றாகத் திகழ்வது கூத்துக் கலை. குறிப்பாக நமது நாட்டில் பண்டைய காலம் தொட்டே மிகச் சிறப்பான கலையாகத் திகழ்வது இக்கலை.

பயன்பாடுகள் பிறந்த பின்னர் அவற்றிற்கான இலக்கணம் எழுதும் முறை பொதுவாக எல்லாத் துறைகளிலும் காணப்படுவதே. அவ்வழி கூத்துக் கலைக்கும் இலக்கணநூலாக இலங்கியவை எண்ணற்ற நூல்கள். வடமொழியிலும் செந்தமிழிலும் வழங்கி வந்த அத்தகைய நூல்கள் கலைகளை மரபுவழியாகச் செம்மை செய்தன. தமிழில் கூத்துக் கலை மிகப் பழையதெனினும் அதற்கான இலக்கண நூல்களில் பல அழிந்து பட்டன. வடமொழியிலும் பரதமுனிவர் இயற்றிய நூலுக்குப் பழைய நூல்கள் இன்று வரை கிடைத்தில. அந்த பரதநூலும் பலரால் இயற்றப் பட்டதென்பது பல ஆய்வாளர்களின் முடிவு.

வடமொழியைப் பொறுத்த வரை காப்பியங்களை இருவகையாகப் பகுப்பர். காதால் மட்டும் கேட்கவல்ல காப்பியங்களை (இயலிலக்கியத்தை) ச்ரவ்ய காவ்யம் என்பர். கண்ணால் காணவல்ல கூத்தியல் நூல்களை த்ருச்யகாவ்யம் என்பர். இப்படி இருவகையாகப் பிரிந்த காப்பியங்களின் இலக்கணமும் இருவகைப் பட்டது. பரதரின் நாட்ய சாஸ்திரத்தை ஆதாரமாகக் கொண்டே இருவகை இலக்கணங்களும் வளர்ந்தன. ஆயினும் பரதரின் நாட்யசாஸ்திரம் பெயருக்கேற்றாற்போல கூத்தியல் இலக்கணத்தையே பெரும்பான்மைப் பகுதியாகக் கொண்டுள்ளது.

அதன்பிறகு வந்த சில பொருளிலக்கண நூல்கள் தலைவனின் வகைகள், தலைவியின் வகைகள், மெய்ப்பாடுகள் என்று பொதுவாக வரையறுத்தாலும் அவை இயலிலக்கியத்தையே முதன்மையாகக் கொண்டுள்ளன. இதனிடையே பத்தாம் நூற்றாண்டில் தனஞ்ஜயன் என்னும் கவியால் எழுதப் பட்ட தசரூபகம் என்னும் நூல் முழுமையாகக் கூத்தியல் இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்நூல் நாட்யம் என்பதைப் பின்வருமாறு வரையறுக்கிறது

அவஸ்தானுக்ருதி: நாட்யம் (अवस्थानुकृतिः नाट्यम्)
அவஸ்தை – நிலை, அனுக்ருதி – அதனைப் போலவே தோற்றத்தை உண்டாக்குதல்.

நிகழ்வில் அல்லது காப்பியங்களில் கூறப்பட்ட தலைவன் முதலானோரை நான்குவித அபிநயம் கொண்டு அவர்களைப் போன்ற தோற்றத்தை உண்டாக்குவது நாட்யம் என்று இதன் பொருள். நான்கு வித அபிநயங்களாவன ஆங்கிகம் (உடல் சார்ந்த அபிநயம்), ஆஹார்யம் (அணிகலன் மற்றும் உடை), வாசிகம் (இயல் வரிகள்) மற்றும் ஸாத்விகம் (முக அபிநயம்) ஆகியவையாகும். இந்த நாட்யம் கருமை, வெண்மை முதலான ரூபங்களைப் (நிறங்களைப்) போன்று கண்ணால் காணப் படுவதால் ரூபம் என்றும் அழைக்கப் படும். இராமன் முதலான தலைவர்களை நடிகர்கள் மீது ஏற்றுவதால் ரூபகம் என்றும் வழங்கப் படும்.

இத்தகைய ரூபகம் பத்து வகைப் படும்
1. நாடகம் 2. ப்ரகரணம் 3. பாணம் 4. ப்ரஹஸனம் 5. டிமம்
6. வ்யாயோகம் 7. ஸமவகாரம் 8. வீதி 9. அங்கம் 10. ஈஹாம்ருகம்

இவை ரஸத்தை (மெய்ப்பாட்டை) ஆதாரமாகக் கொண்டவை. இவை தவிர வெறும் பாவத்தை (ரஸம் உண்டாகத் தேவையான தோற்றப் பாடு) மட்டும் ஆதாரமாகக் கொண்டவை ந்ருத்யம் எனப்படும். இந்த நாட்யத்தின் அங்கமாக ந்ருத்யம் பயன்படுத்தப் படலாம். எடுத்துக்காட்டாகத் திரைப்படங்களை (பழையத் திரைப்படங்கள். தயவு செய்து இக்காலத் திரைப்படங்களை கணக்கெடுக்காதீர்) நாட்யமாகக் கொண்டால் அவற்றின் இடையே இடம்பெறும் பாடல்களை ந்ருத்யம் எனச் சொல்லலாம். முழு திரைப்படத்தைக் கண்டால் அதன் அடியிழையாக ஓடும் ரஸத்தை அனுபவிக்க முடியும். வெறும் பாடலை மட்டும் காணும்போது அப்போதைய பாவத்தை மட்டுமே உணரமுடியும்.
இவற்றிற்கிடையேயான பேதங்களாவன:
நாட்யம்ந்ருத்யம்
ரஸத்தை அடிப்படையாகக் கொண்டது.பாவத்தை அடிப்படையாகக் கொண்டது
நடிப்பவன் நடன் எனப்படுவான் நர்த்தகன் எனப்படுவான்
வாக்யார்த்த-அபிநயத்தைக் கொண்டது. பதார்த்த-அபிநயத்தைக் கொண்டது.


வாக்யார்த்த அபிநயம் என்பது முழு சொற்றொடரின் பொருளை அபிநயிப்பது. பதார்த்த அபிநயம் என்பது ஒவ்வொரு சொல்லிற்குமான தனி அபிநயங்களைப் புரிவது. வாக்யார்த்த அபிநயத்தில் ஸாத்விக அபிநயம் எனப்படும் முகத்தின் அபிநயங்களே அதிகமாக இருக்கும். ஆனால் பதார்த்த அபிநயத்தில் சொல்லிற்குத் தகுந்த அபிநயத்திற்காக ஆங்கிகம் எனப்படும் உடலியக்கங்கள் அதிகமாக இருக்கும். மீண்டும் பழைய திரைப்படங்களை மனக்கண்ணில் நிறுத்துங்கள். திரைப்பட வசனங்கள் மற்றும் மற்றைய நிகழ்வுகளுக்கான அபிநயம் முகம் சார்ந்ததாக இருக்கும். ஒரு வாக்கியம் பேசி முடித்தபின் அதனையொட்டிய அபிநயம் முகத்தில் தெரியும். ஆனால் பாடல்களில் ஒவ்வொரு சொல்லிற்குமான அபிநயம் உடலாலும் முகத்தாலும் மேலும் இருவித அபிநயங்களாலும் நடித்துக் காட்டப் படும். சிற்பங்களில் காணப்படும் கரணங்களும் அவற்றின் தொகுதிகளான அங்கஹாரங்களும் இவ்வகை ந்ருத்யத்தின் அங்கங்களாக பதார்த்த அபிநயத்தை விளக்கும் வண்ணமே பயன்பட்டன.

தற்போது நாம் ஆடற்கலையை நாட்யம் என்று கூறுவது தவறானது. நாட்யம் என்னும் சொல் முழு நாடகத்தைக் குறிப்பது. வெறும் பாவத்தை அடிப்படையாகக் கொண்டு நடிக்கும் ஆடல் ந்ருத்யம் என்றே வழங்கப் பட வேண்டும். இவை தவிர ரஸமும் பாவமும் இல்லாமல் வெறும் அங்க அசைவுகளைக் கொண்டு ஆடப்பெறும் ஆடல் ந்ருத்தம் என வழங்கப் படும். இது தாளம் மட்டும் லயத்தை மட்டுமே கொண்டது.

ந்ருத்யம் மார்கம் எனவும் ந்ருத்தம் தேசீ எனவும் வழங்கப் படும். ஆகவேதான் தற்போது வெவ்வெறு மாநிலங்களுக்கான ஆடல்கள் உடலசைவுகளைக் கொண்ட ந்ருத்தத்தினால் வேறுபடுகின்றன. இவையிரண்டும் லாஸ்யம் மற்றும் தாண்டவம் என்று இருவிதங்களால் நான்கு வகையாகப் பிரிக்கப் பட்டிருக்கின்றன.
நாட்யம் பத்துவகைப் பட்டது என்பதை முன்னரே பார்த்தோம்.

இந்தப் பத்துவகைப் பிரிவுகளையும் உண்டாக்கும் காரணிகளாவன

1. கரு
2. தலைவன் மற்றும் தலைவி
3. ரஸம்

1. கரு (வஸ்து)
கரு ஆதிகாரிகம்(முக்கிய கதைக் கரு), ப்ராஸங்கிகம்(தொடர்புடைய இடைக்கதையின் கரு) என்று இருவகைப் படும். அவையும் உட்பிரிவுகளை உடையன. கதையின் பொருட்களால் முகம், ப்ரதிமுகம், கர்ப்பம், அவமர்சம், உபஸம்ஹாரம் என்று ஐந்து விதமான ஸந்திகள் உண்டாகின்றன. (இவற்றை சிலப்பதிகாரத்தின் அடியார்க்கு நல்லார் உரையும், வீரசோழியத்தின் பொருளதிகாரத்தின் கலித்துறை உரையும் குறிப்பிடுகின்றன. )

2. தலைவன் மற்றும் தலைவி (நேதா & நேத்ரீ)
வடமொழியிலக்கியத்தைப் பொறுத்தவரை தலைவன் தீர-உதாத்தன், தீர-லலிதன், தீர-உத்ததன், தீர-சாந்தன் என்று நான்கு விதமாகப் பிரிக்கப் படுகிறான். தீரோதாத்தன் அனைத்து நற்குணங்களையும் பூண்டவன் (எ.கா இராமன்). தீரலலிதன் என்பவன் கவலையின்றிக் கலைகளில் ஆர்வம் கொண்டவன்(எ.கா. உதயணன்). தீரசாந்தன் மக்களில் ஒருவனான ஸாதாரணமானவன்(எ.கா மாலதீ மாதவத்தில் மாதவன்). தீரோத்ததன் என்பவன் சினம் முதலான குணங்களைக் கொண்டவன்(எ.கா பீமன், பரசுராமன் முதலியோர்). இவர்களில் இருமனைவி உடையோரில் த்ருஷ்டன், சடன் மற்றும் தக்ஷிணன் என்ற பிரிவுகள் உண்டு. ஒரு மனைவி உடையவன் அனுகூலன் எனப்படுவான். மேலும் இவர்கள் உத்தமர், மத்யமர், அதமர் என்று மூன்று பிரிவுகளில் உட்படுவர். ஆக தலைவனின் பிரிவுகளின் எண்ணிக்கை நாற்பத்தெட்டு.
தலைவி தன்னவள், பிறன்மகள், பொதுமகள் என மூவகைப் படுவாள். தன்னவள் முக்தா, மத்யா, ப்ரகல்பா என்று மூன்று பிரிவுகளை உடையது. மேலும் தீரா, அதீரா, தீராதீரா என்ற மூன்று உட்பிரிவுகளை உடையது. அதன் உட்பிரிவுகளாக உத்தமா, மத்யமா, அதமா என்று மூன்றுள்ளன. மேலும் ஸ்வாதீன பதிகா முதலான எட்டு நிலைகள் தலைவிக்கு உண்டு.

3. ரஸம்
நாட்யத்தைப் பொறுத்தவரை ரஸம் எட்டுவகைப் படும். சாந்தமும் ரஸமானாலும் நாட்யத்தில் காட்டுவதற்கு தகுதியற்றதாகையால் எட்டுவகை ரஸங்களே நாட்யத்தில் ஒத்துக் கொள்ளப் பட்டுள்ளன. ஒவ்வொரு வகை நாட்யத்திற்கும் ஒவ்வொரு வகை ரஸம் என வகுக்கப் பட்ட நியதியின் படியே அவற்றிற்கு ரஸங்களை வரையறுக்க முடியும். நாட்யரஸங்களில் அங்கி-ரஸம், அங்க-ரஸம் என்று இரு பிரிவுகள் உண்டு. மூலக் கருவோடு அடியிழையாக ஒட்டி வருவது அங்கி ரஸம் எனப்படும். இடையிடையே மாறி அங்கி ரஸத்தை போஷிக்கும் முகமாக அமைந்தவை அங்க ரஸமெனப்படும்.

பத்து வகை நாட்யங்களாவன

1.நாடகம்

ரூபகங்களில் அனைத்து இலக்கணங்களோடும் இயைந்தது நாடகம். இதன் கரு தேவர்கள் தொடர்பானதோ அல்லது மனிதர்கள் தொடர்பானது அல்லது இரண்டும் இயைந்த கதையாக இருக்கலாம். ஸூத்ரதாரன் முதலில் நுழைந்து முன்னர் நிகழவேண்டிய அறிமுகத்தைச் செய்து கருவையோ அல்லது பாத்திரத்தையோ குறிப்பிடுவான். நாயகன் தீர-உதாத்தன் ஆவான். அவன் மனம் கவரும் குணங்களை உடையவன். வீரன். புகழ்பெற்ற மரபில் வந்தவன். ச்ருங்காரம் அல்லது வீரம் முக்கிய ரஸமாக இருக்கும். இறுதிப் பகுதியான நிர்வஹணத்தை (Climax) ஆச்சர்யமூட்டும் வகையில் அமைக்க வேண்டும். நாயகனை மரணமடைந்ததாகக் காட்டக் கூடாது. ஐந்து அங்கங்களிலிருந்து (Acts) பத்து அங்கங்கள் வரை அமைக்கலாம்.

2.ப்ரகரணம்

இதன் கரு கல்பனையானது. தீரசாந்தனை நாயகனாக உடையது. தலைவியை குலமகளாகவோ பொதுமகளாகவோ அல்லது இருவரையுமோ படைக்கலாம். இப்படி இவர்களைப் பொறுத்து மூன்று விதங்கள் உண்டு.
நாடகம் மற்றும் ப்ரகரணங்களின் இலக்கணங்களைக் கலந்ததால் உண்டாவதை நாடிகா என்று குறிப்பிடுவர். அது கலப்பு என்பதனால் தனி ரூபகமாகக் கணக்கெடுப்பதில்லை.

3.பாணம்

தான் உணர்ந்தது அல்லது பிறரால் உரைக்கப் பட்டதான சூதாடி அல்லது போக்கிரியின் கதையை மையமாக வைத்து இது அமையும். ஒருவன் மட்டுமே கதையை வர்ணிப்பான். (Mono-Acting). வீரம் அல்லது ச்ருங்காரம் முக்கிய ரஸமாக அமையும். ஒரு அங்கம் மட்டுமே இடம்பெறும். லாஸ்யத்தின் அங்கங்களையும் அமைக்கலாம்.

4.ப்ரஹஸனம்

இது சுத்தம், வைக்ருதம், ஸங்கரம் என்று மூவகைப் படும். பௌத்தர், அந்தணர் முதலியோர், தோழிகள், விடன்(தலைவனின் தோழன்) ஆகியோர் தமது வேடத்தாலும் பாஷையாலும் சிரிப்பூட்டுவது சுத்த ப்ரஹஸனம் எனப்படும். காமுகர் வேடம் பூண்ட நபும்ஸகர், கஞ்சுகி (வயதான அந்தணர்), துறவி முதலியோரைக் கொண்டு நகைச்சுவையை வளர்ப்பது வைக்ருதம் (இயற்கைக்குப் புறம்பானது) எனப்படும். இனி கூறப்போகும் வீதியின் அங்கங்களோடு சேர்ந்தது ஸங்கீர்ணம்(கலப்புள்ளது) எனப்படும். ப்ரஹஸனத்தில் ஆறு ரஸங்களை அல்லது ஹாஸ்யத்தை மட்டும் அமைக்கலாம். மஹேந்திர சக்ரவர்த்தியால் இயற்றப் பட்ட இரு ப்ரஹஸனங்களில் மத்த விலாஸ ப்ரஹஸனம் சுத்தவகையைச் சேர்ந்தது. பகவதஜ்ஜுகீயம் வைக்ருதவகையைச் சேர்ந்தது.

5.டிமம்

மிகவும் புகழ்பெற்ற கருவை அமைக்க வேண்டும். நாயகர்களாக தேவ, கந்தர்வ, யக்ஷ, ராக்ஷஸ, பூத, பிசாசங்களை அமைக்கலாம். ஹாஸ்யம் அல்லது ச்ருங்காரத்தைத் தவிர மற்றயவற்றை ரஸமாகக் கொள்ளலாம். நான்கு அங்கங்களைக் கொண்டதாக அமைக்கலாம்.

6.வ்யாயோகம்

புகழ்பெற்ற கதைக்கரு அமையும். டிமத்தைப் போலவே ரஸங்களும் அமையும். பெண்ணைக் காரணமாகக் கொள்ளாத போர் அமைய வேண்டும். ஒரு அங்கத்தை மட்டுமே கொண்டது.

7.ஸமவகாரம்

தேவாஸுரமான கரு அமைந்திருக்கும். தேவர்களும் அஸுரர்களும் தலைவர்களாவர். வீரரஸம் முக்கியமானது. மூன்று அங்கங்களைக் கொண்டது.

8.வீதி

பாணத்தைப் போன்றது. ச்ருங்கார ரஸத்தைக் குறிப்பிடலாம். மற்றைய ரஸங்களையும் தொட்டுக் கொள்ளலாம். இரண்டு அல்லது ஒரு பாத்திரம் மட்டுமே இருக்கலாம்.

9.அங்கம்

கதையை தன் அறிவினால் கற்பிக்க வேண்டும். கருணை ரஸத்தைக் கொண்டது. பாமர மக்களைத் தலைவராக அமைக்கலாம். பெண்ணின் அழுகை முதலியவற்றைக் கொண்டது. வெறும் பேச்சு மூலமே போர் நடைபெறும்.

10.ஈஹாம்ருகம்

கல்பனை அல்லது நிகழ்ந்தது இரண்டையும் கலந்து உருவாக்க வேண்டும். மனிதனைத் தலைவனாகவும் தேவர்களை எதிர்த் தலைவனாகவும் (Villain) அமைக்க வேண்டும். தீர-உத்ததர்களாக நாயகர்களை அமைக்க வேண்டும். இறுதியில் போரை உருவாக்கி அதனைத் தவிர்க்க வேண்டும்.
இப்படி பத்து விதமான ரூபகங்கள் உள்ளன. வெறும் நாடகம் என்னும் சொல்லில் மட்டும் இவை அடங்காது. நாடகத்தைத் தவிர பெரும்பாலும் ப்ரஹஸனம் மட்டும் எல்லோராலும் அறியப் படுகிறது. மத்தவிலாஸ ப்ரஹஸனம், பகவதஜ்ஜுகீயம் முதலான ப்ரஹஸனங்கள் புகழ்வாய்ந்தவை. இவை தவிர நாடகம் ஒன்றும் மஹேந்திர சக்ரவர்த்தியால் இயற்றப் பட்டிருக்கலாம் என்று மாமண்டூர் கல்வெட்டு மூலம் ஊகிக்க முடிகிறது. ஆயினும் மற்ற விதங்களிலும் பல நூல்கள் உள்ளன என்பது அறியத் தக்கது. காளிதாஸனுக்கு முற்பட்ட கவியான பாஸன் என்னும் கவி வ்யாயோகம், பாணம், டிமம் முதலான பல வகைப்பட்ட நாட்யங்களை மஹாபாரதக் கதைகளைக் கொண்டு வடித்திருக்கிறார். this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.