![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 56
![]() இதழ் 56 [ ஃபிப்ரவரி 24 - மார்ச் 15, 2009 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
திரும்பிப் பார்க்கிறோம்
அன்புள்ள வாருணி,
17. 8. 1989 அன்று தமிழ்ப் பல்லைக்கழகத்தின் கட்டடக்கலைத் துறைத் தலைவர்பேராசிரியர் முனைவர் கோ. தெய்வநாயகத்திடம் இருந்து ஒரு மடல் வந்தது. 'தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பில் கட்டடக்கலைத் துறையில் நாட்டிய கரணங்கள் நூற்றெட்டுக்குமாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெயர்களைத் திருத்தம் மற்றும் உறுதி செய்யும் பணிப்பட்டறை ஒன்றினை 29. 9 1989 வெள்ளிக்கிழமை அன்று தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழக அரண்மனை வளாகத்தில் நிகழ்த்தத் திட்டமிட்டிருப்பதாகவும் அதில் வல்லுநராகக் கலந்துகொண்டு துணைநிற்குமாறும்' பேராசிரியர் கேட்டிருந்தார். மகிழ்வுடன் அப்பொறுப்பினை ஏற்றுக் கொண்டு தமிழ்ப் பல்கலை சென்றேன். என்னுடன் இரண்டு அறிஞர்கள் உடனிருந்தனர். செல்வி அ. வடிவுதேவி என்பார் ஒவ்வொரு கரணமாக மேடையில் நிகழ்த்திக் காட்ட, அக்கரணத்திற்குரிய வரையறையை வடமொழியிலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் படித்து விளக்கினார்கள். வடமொழி வரையறைகளைத் தமிழ்ப்படுத்த உதவியவராகத் திரு. சு. விசுவநாதன் அறிமுகப்படுத்தப்பட்டார். கரணங்களின் பெயர்களைத் தமிழ்ப்படுத்திய இந்த முயற்சி பாராட்டற்குரியது. என்றாலும், கரண நிகழ்த்தல்களில் முழுமையில்லை. மொழியாக்கத்திலும் நிறைவில்லை. 'ஸ்வஸ்திக ரேசிதம்' என்னும் கரணம் 'குறுக்கிடு கையோச்சு' என்று மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. 'ரேசிதம்' என்பது ஆடற்கைகளுள் ஒன்றாகும். இரண்டு கைகளையும் பக்கவாட்டில் சற்றே உயர்த்தி நீட்டி மணிக்கட்டளவில் தாழ்த்தும் கையமைப்பே ரேசிதம். இதை 'ஓச்சு' என்ற மொழியாக்கம் எந்த அளவிற்கு உணர்த்தும் என்பது எனக்கு விளங்கவில்லை. 'ஓச்சு' என்னும் சொல்லுக்குப் பேரகராதி தரும் பொருள் விளக்கமும் இந்த மொழியாக்கத்திற்கு ஏற்புடையதாக இல்லை. திரு. தெய்வநாயகத்திடம் அவர் முயற்சியைப் பாராட்டுவதாகக் கூறி, என் ஐயங்களையும் புலப்படுத்தினேன். நிகழ்வின் முடிவில் கருத்துரைக்குமாறு என்னை அழைக்கவேண்டாம் என வேண்டி, பின்னாளில் மீண்டும் ஒருமுறை இம்மொழியாக்கங்களை கூர்ந்து ஆராய்ந்து செம்மைப்படுத்திடுமாறு கூறி விடைபெற்றேன். இந்நிகழ்வின்போது நட்புடன் இருந்த திரு. தெய்வநாயகம் பிறகு விலக்கமானார். உண்மையான உணர்வுகளைப் புலப்படுத்தும்போது விலக்கங்கள் தவிர்க்கமுடியாதவை. தமிழின், வரலாற்றின் நலத்திற்கு முன் இத்தகு விலக்கங்களைக் கருதவேண்டியதில்லை. மையத்தின் சார்பில் 1989 ஆகஸ்டு 23ம் நாள், 'கொடுமணல் அகழ்வுகள்' பற்றிய உரை அமைந்தது. திருச்சிராப்பள்ளி வானொலி நிலைய இயக்குநர் திரு. பி. யூ. அய்யூப் தலைமை ஏற்றார். அவர் சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் நிகழ்ச்சிப் பொறுப்பாளராக பணியில் இருந்தபோதே நட்பானவர். கொடுமணல் அகழ்வுகள் உரையை நிகழ்த்தத் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல்துறைத் தலைவரும் அகழ்வை முன்னின்று நடத்தியவருமான பேராசிரியர் முனைவர் எ. சுப்பராயலுவை அழைத்திருந்தோம். சங்க இலக்கியங்களில் கொடுமணம் என்று குறிக்கப்படும் கொடுமணல் பெரியார் மாவட்டத்தில் உள்ளது. தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டுத்துறை மூன்றும் இணைந்து அவ்வூரில் நிகழ்த்திய அகழாய்வு பல அரிய தரவுகளைத் தந்திருந்தது. அந்தத் தரவுகளை முன்னிலைப்படுத்தித் திரு. எ. சுப்பராயலு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய பேருரைக்குத் தமிழ்நாட்டின் வரலாற்றாய்வாளர்களுள் பெரும்பாலோர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுள் ஒருவனாக நானும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றேன். நான் அறிந்தவரையில் தமிழ்நாட்டில் அதுநாள்வரை அகழாய்வு செய்த அறிஞர்களோ, துறைகளோ இது போல் வரலாற்றாய்வாளர்களை ஒருங்கிணைத்துத் தங்கள் கண்டுபிடிப்புகளை, கருத்துக்களை முன்வைத்து விவாதிக்கத் துணிந்ததில்லை. திரு.. சுப்பராயலுவின் இந்த முயற்சி அவர் மீது எனக்கிருந்த மதிப்பை உயர்த்தியது. வந்திருந்தோரிடையே ஏறத்தாழ இரண்டு மணிநேரம் தம்முடைய ஆய்வின் பலன்களைப் படக்காட்சி, பொருட்காட்சி கொண்டு பகிர்ந்துகொண்ட பேராசிரியர், அவையிலிருந்த பலரும் அவ்வாய்வு முடிவுகள் குறித்துக் கருத்துக்கூற வாய்ப்பளித்தார். அகழாய்வில் கிடைத்த எலும்புகளை ஆய்வு செய்ய அறிஞர் பற்றாக்குறை இருப்பதை அவர் குறிப்பிட்டபோது, தடயவியல் அறிஞர்களின் துணையைப் பெற்றுத் தருவதாக நான் கூறியது நினைவிருக்கிறது. திரு. இராம. சுந்தரம் சில கருத்துக்களை முன்வைத்தார். சுருக்கமாகச் சொன்னால் திரு. சுப்பராயலுவின் அந்த நிகழ்ச்சி மிகச்சிறந்த முன்னுதாரணமாக அமைந்தது. அதன் அமைப்பால் ஈர்க்கப்பட்டே, நாம் பெற்ற இன்பம் பெறுக நம் மையத்து நண்பர் குழாம் என்று அதே பொழிவை மையத்தில் ஏற்பாடு செய்தேன். திரு. சுப்பராயலுவின் பொழிவைக் கேட்கச் சிராப்பள்ளி அறிஞர்கள் திரண்டிருந்தனர். அவர்களுள் பேராசிரியர் வீ. ப. கா. சுந்தரமும் ஒருவர். அந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒளிநாடாவில் பின்னணி இசை சேர்க்கப்பட்டிருந்தது. திரு. வீ. ப. கா. சுந்தரம் நிகழ்வின் முடிவில் அமைந்த கேள்வி நேரத்தின்போது அந்தப் பின்னணி இசை ஆய்வுப் பதிவை இரசிக்கப் பெரும் இடையூறாக இருந்தமையைக் குறிப்பிட்டு, எதிர்காலத்தில் அவ்விசைப் பின்னணி இல்லாமல் உரை நிகழ்த்துமாறு திரு. சுப்பராயலுவை கேட்டுக் கொண்டார். தமிழர் வாழ்வு, அவர்தம் தொழில் நேர்த்தி, அக்காலப் பொருளாதாரம் என்பன குறித்து அதுநாள்வரை வெளிப்படாதிருந்த பல அரிய தரவுகளை முன்வைத்த திரு. சுப்பராயலுவிடம் இப்படியொரு செய்தியைப் பேராசிரியர் பகிர்ந்துகொள்கிறாரே என்று நான் வருந்தினேன். ஆனால், சுப்பராயலு சிறிதும் சினமுறாது அவ்வாறே செய்துவிடலாம் என்று விடையிறுத்தமை மகிழ்வளித்தது. அவ்வறிஞரின் பெருந்தன்மை குறித்துப் பெருமைப்பட்டேன். சென்னை சித்தூர் சாலையிலுள்ள திருவல்லம் அருள்மிகு விசுவநாதர் திருக்கோயிலில் இருந்து தொட்டி ஒன்று தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுத்துறையால் கண்டறியப்பட்டதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது. சோழர் காலத்துக் கலைப்பொருளாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த அத்தொட்டியின் சிற்ப வேலைப்பாடுகள் என்னை மிகவும் கவர்ந்தன. படம் தெளிவாக இல்லை என்பதால், பேராசிரியர் அரசுவுக்குத் தொலைப்பேசி விவரங்களைக் கூறி, 'வல்லம் சென்று அத்தொட்டியைப் படமெடுத்து அனுப்பமுடியுமா?' எனக் கேட்டேன். அவரும் ஒப்புக்கொண்டு அவரது ஒளிப்பட நண்பர் திரு. கோவிந்தராஜூடன் தொட்டியைப் பல கோணங்களில் படமெடுத்து எனக்கு அனுப்பி வைத்தார். அப்படங்களைப் பார்த்த பிறகுதான் அச்சிற்பத்தொடரில் கோலாட்டப் பெண்கள் இருப்பதை அறியமுடிந்தது. அத்தொட்டியை நேரில் பார்க்க ஆவலுற்றேன். அதுபோழ்து சென்னைப் பயணம் ஒன்றும் அமைந்தமை வாய்ப்பானது. நானும் பேராசிரியர் அரசுவும் திருவல்லம் சென்று அந்தத் தொட்டியை ஆராய்ந்தோம். தொட்டியின் மேல் விளிம்பின் வெளிச்சுற்றளவு 2. 77 மீ. ஆகும். தொட்டியின் உயரம் 56 செ. மீ. உள் குழிவின் உயரம் 40 செ. மீ. தொட்டியின் மேல் விளிம்பில் சங்கிலிப் பிணைப்புப் போன்ற செதுக்கல், முடிச்சுகளுடனும் தனித்தும் காணப்பட்டது. அதை அடுத்துள்ள சாய்வளை வரிசை சில இடங்களில் சதுரப்பட்டி பெற்றிருந்தது. அதன் கீழ் இரண்டு கம்புகள் அமைய, இரண்டாம் கம்பில் பதக்க மணிகள் சேர்க்கப்பட்டிருந்தன. அவற்றை அடுத்துத் தொட்டியைச் சுற்றிலும் தொடராகச் சிற்பங்கள்தான். கருவுற்ற பெண் ஒருவர் வலக்காலை நீட்டி, இடக்காலை குத்துக்காலாக வைத்தபடி வலக்கையைத் தரையில் ஊன்றி, இடக்கையைக் கன்னத்தருகே வைத்தபடி அமர்ந்திருக்க, வலப்புறத்தே உள்ள பெண் அவருக்கு ஒப்பனை செய்கிறார். கருவுற்றிருக்கும் பெண்ணின் இடப்புறத்தில் மகளிர் கோலாட்டம் ஆடும் காட்சி. வளைந்தும் நிமிர்ந்தும் சாய்ந்தும் சரிந்தும் கோலாட்டமிடும் பெண்களின் இடையாடைகள் அவரவர் கோலத்திற்கேற்ப விரிந்தும் சுருங்கியும் மடிப்புகளுடன் காட்சியளிக்கிறது. அவர்களுக்கிடையில் உள்ள ஆடவர்களுள் ஒருவர் மிருதங்கம் இசைக்க, மற்றொருவர் ஆடல் நிகழ்த்துகிறார். மற்றோர் ஆடவர் அமர்ந்த நிலையில் மரக்கிளை ஒன்றை வழிபட அதன்மீது அர்த்தரேசித இடக்கையை வீசி வலக்கையில் குறுந்தடி ஏந்தி ஆடலரசராய்க் காட்சியளிக்கிறார் மற்றொருவர். அவரது தோற்றம் அவரை ஆடற்கூட்டத்தின் நாயகமாய்க் காட்டுகிறது. இந்த ஆடற்காட்சிக்குக் கீழே பூவேலையும் அதையடுத்துப் பின்னல் வேலையும் அவற்றைத் தாங்கினாற் போலத் தாமலையிதழ்கள் விரிய அதன் அடியில் கீழ்த்தளம் அமைந்துள்ளது. கருவுற்ற பெண்ணிற்குப் பூமுடித்துக் கூடியிருப்போர் மகிழ, கோலாட்டம் நிகழ்த்தும் மங்கல நிகழ்வொன்றைச் சிற்பக் காட்சியாய்ச் சிறைப்பிடித்திருக்கும் இந்த வல்லத்துத் தொட்டி, நாளிதழ் குறிப்பிட்டிருந்தது போலச் சோழர் காலத்தது அன்று. அது விஜயநகர வேந்தர்களின் கலைச் சீதனம். தொட்டியின் புறத்தே காணப்படும் கோலாட்டக் காட்சி அதே நயத்துடனும் அதே மெருகுடனும் விஜயநகரக் கோயில்கள் பலவற்றில் காணப்படுகிறது. காஞ்சிபுரத்திலுள்ள ஏகாம்பரநாதர், கச்சபேசுவரர், வரதராஜப் பெருமாள் கோயில்களில்கூட இக்கோலாட்டக் காட்சிகள் இடம்பெற்றிருப்பது இங்கு நினைக்கத்தக்கது. இந்தத் தொட்டியைப் பற்றிய என்னுடைய கட்டுரை தினமணி கதிர் 25. 3. 1990 இதழில் வெளியானது. திருவல்லம் கோயிலில் குடக்கூத்துச் சிற்பம் ஒன்றைக் கண்டறிந்ததுடன், புதிய கல்வெட்டுகளையும் கண்டறியும் வாய்ப்பமைந்தது. அது பற்றிய செய்தி 19. 9. 1989ம் நாள் செய்தியிதழ்களில் வெளியானது. திருவல்லம் பயணத்தின்போதுதான் அருகிலிருந்த மேல்பாடிக் கோயில்களைப் பார்க்க முடிந்தது. மேல்பாடியில் இரண்டு கோயில்கள் உள்ளன. ஒன்று அரிஞ்சிகை ஈசுவரமான சோழீசுவரம். சோழ அரசரான அரிஞ்சயனின் பள்ளிப்படைக் கோயிலாக அமைந்த அரிஞ்சிகை ஈசுவரம் முதல் இராஜராஜரால் எழுப்பப்பெற்றது. இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக விளங்கும் அத்திருக்கோயில், பல அரிய சிற்பங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் குறிப்பிடத்தக்கது கண்ணப்பரின் சிற்பம். கண்ணப்பர் வாழ்க்கை தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் திருக்கோயிலின் இரண்டாம் கோபுர வடமுகத்தில் பதிவாகியுள்ளது. அக்கோயிலை ஆய்வுசெய்யும்வரை சேக்கிழாரின் கண்ணப்ப நாயனார் புராணம்தான் தெரிந்திருந்தது. தஞ்சாவூர்க் கோயில் சிற்பத்தொகுதியைப் பார்த்த பிறகுதான் கண்ணப்ப நாயனார் வரலாற்றில் சேக்கிழார் செய்திருந்த மாற்றங்களை அறியமுடிந்தது. ![]() ![]() தஞ்சாவூர்த் தொகுதியில் கண்ணப்பர் வரலாறு மூன்று சிற்பங்களாக இடம்பெற்றுள்ளது. முதல் சிற்பம் கண்ணப்பர் தம் ஊர்க் கோயிலில் வணங்கி வேட்டைக்குப் புறப்படும் காட்சியைக் காட்டுகிறது. கண்ணப்பர் குடுமிநாதரின் முன் தாம் வேட்டையாடிக் கொணர்ந்த உடும்புடன் நிற்பதை இரண்டாவது சிற்பம் படம்பிடிக்கிறது. மூன்றாம் சிற்பத்தில் கண்ணப்பரைத் தடுத்தாட்கொள்ளும் இறைவனைக் காணமுடிகிறது. சேக்கிழார் தரும் வரலாற்றின்படி கண்ணப்பர் பல விலங்குகளை வேட்டையாடி அவற்றின் உடலில் அமைந்த நல்ல சதைப்பிடிப்பான சுவையான பகுதிகளைத் தேர்ந்து இறைவனுக்குப் படைப்பார். ஆனால், தஞ்சாவூர்ச் சிற்பம் கண்ணப்பரின் கையில் உடும்பைக் காட்டியது. முதன் முதலாக இந்தச் சிற்பத்தைப் பார்த்தபோது எங்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது. சேக்கிழாரிடமிருந்து இச்சிற்பம் வேறுபட்டிருந்தமை மயக்கம் தந்தது. குழப்பத்திற்கு விடை காணவேண்டி, கண்ணப்பரைச் சுட்டும் அத்தனை இலக்கியங்களையும் படித்தோம். அப்போதுதான் நக்கீரதேவரின் 'திருக்கண்ணப்ப தேவர் திருமறம்' என்ற பாடல் கிடைத்தது. பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள அப்பாடல் அற்புதமானது. அதைப் படித்த பிறகுதான் தமிழ்நாட்டுச் சிற்பிகள் எந்த அளவிற்கு இலக்கிய அறிவுடையவர்களாகத் திகழ்ந்தார்கள் என்பதை அறியமுடிந்தது. 'கடும்பகல் வேட்டையில் காதலித்து அடித்த உடும்பொடு சிலைகணை உடைத்தோல் செருப்புத் தொடர்ந்த நாயொடு தோன்றினன்' எனும் நக்கீரதேவரின் பாடலடிகளைச் சொல் பிசகாமல் இராஜராஜர் காலச் சிற்பிகள் காட்சியாக்கியிருந்த அதிசயம் என்னை வியக்கவைத்தது. சிற்பத்தொகுதியில் இடம்பெற்றிருந்த மூன்றாம் சிற்பமும் நக்கீரதேவரின் பாடலடியைப் பின்பற்றியே அமைந்திருந்தது. அதில், கண்ணப்பர் தரையில் முழந்தாளிட்டு அமர்ந்தபடி கையிலிருக்கும் அம்பால் கண்ணை அகழ்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிப்பார். எதிரிலிருக்கும் சிவலிங்கத்திலிருந்து கையொன்று வெளிப்பட்டிருக்கும். இலிங்கத்தின் பின்னுள்ள மரத்தின் மறைவில் சிவகோசரியார் நின்றிருப்பார். திருமறப் பாடலடிகள், '. . . . . . . . . . இதுதனைக் கண்டஎன் கண்தனை இடந்து கடவுள்தன் கண்ணுறு புண்ணில் அப்பியும் காண்பன் என்றொரு கண்ணிடைக் கணையது மடுத்துக் கையில் வாங்கி அணைதர அப்பினன் அப்பலும் குருதி நிற்பதொத் துருப்பெறக் கண்டுநெஞ் சுகந்து மற்றைக் கண்ணிலும் வடிக்கணை மடுத்தனன் மடுத்தலும் நில்லுகண் ணப்ப நில்லுகண் ணப்பஎன் அன்புடைத் தோன்றல் நில்லுகண் ணப்ப என்று இன்னுரை அதனொடும் எழிற்சிவ லிங்கம் தன்னிடைப் பிறந்த தடமலர்க் கையால் அன்னவன் தன்கை அம்பொடும் அகப்படப் பிடித்து அருளினன்' எனப் பேசுவதற்கேற்ப இக்காட்சியைச் சிற்பிகள் வடித்திருக்கும் பாங்கு என்னை வியக்கவைத்தது. இரண்டாம் இராஜராஜருக்கு முற்பட்ட பெரும்பாலான கோயில்களில் கண்ணப்பர் சிற்பம் தஞ்சாவூர்த் தொகுதியில் உள்ளாற் போலவே அமைந்திருப்பதைப் பின்னாளில் கண்டு தொகுத்துள்ளோம். அத்தகு சிற்பப் புதையல்களுள் அம்பாசமுத்திரத்திற்கு அருகிலுள்ள திருவாலீசுவரம், கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருமீயச்சுரம், மேல்பாடி அரிஞ்சிகை ஈசுவரம் என்பன குறிப்பிடத்தக்கன. மேல்பாடியில் இராஜராஜரால் புதுப்பிக்கப்பட்ட கோயிலொன்றும் உள்ளது. சோழேந்திர சிம்மேசுவரம் என்று அழைக்கப்படும் இக்கோயிலும் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் பராமரிப்பிலேயே உள்ளது. சேக்கிழார் கண்ணப்பரின் வரலாற்றில் கண்ட மாற்றந்தான், பின்னாளைய சிற்பங்களுக்கு அடிப்படையானது. இறைவனின் கண்ணில் அடையாளத்திற்காகத் தம் காலை ஊன்றிக் கண்ணப்பர் கண்ணிடந்து அப்ப முயற்சிக்கும் உச்சக் காட்சி சேக்கிழாரின் கற்பனையில் வளர்ந்ததாகும். அந்நாளைய சமுதாயத் தேவைகளை உணர்ந்தவராய் இது போன்ற மாற்றங்களைச் சேக்கிழார் பெரியபுராணத்தில் ஆங்காங்கே இணைத்திருப்பது ஆழப் படிப்போர் அறியக்கூடியவையே. 1988ல் எம். ஃபில். முடித்த நளினி, தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை நடத்திவந்த கல்வெட்டியல், தொல்லியல் பட்டயப் படிப்பில் சேர்ந்தால் நன்றாக இருக்குமெனக் கருதினேன். அவரும் அப்போது பணியேதுமில்லாமல் இருந்தார். அவருடைய வீட்டார் அவரை ஏதாவது ஒரு வேலைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியிருந்தபோதும் கல்வெட்டுகளின் மீதிருந்த அளவிடமுடியாத நாட்டத்தால் அவர் என் பரிந்துரையை ஏற்றார். படிப்பாண்டு முழுவதும் உதவிப்பணம் கிடைக்குமென்றாலும் படிப்பு மதுரையில் இருந்தமையால், விடுதிக் கட்டணம், உணவு எனப் பல செலவுகளை அவர் ஏற்க நேர்ந்தது. நளினியின் மாமா திரு.வெங்கடாசலத்துடன் பேசி நிலைமையை விளக்கியபோது தெளிவேற்பட்டது. திரு. அ.அப்துல் மஜீது மூலமாக முனைவர் இரா. நாகசாமிக்கு நளினியை அறிமுகம் செய்வித்தேன். நல்ல வேளையாக நளினிக்கு 1988ம் ஆண்டு பட்டயப் படிப்புக் கூடிவந்தது. 1988-89 ஓராண்டுப் படிப்பும் 1989-90 ஓராண்டு ஆய்வும் என அமைந்த அப்படிப்பு நளினிக்குக் கல்வெட்டுகளைப் பற்றிய தெளிவான விழிப்புணர்வைத் தந்தது. நளினியின் ஆசிரியராக அமைந்த திரு. சு. இராஜகோபாலை நான் நெருக்கமாக அறியேன் என்றாலும், மஜீது வழி அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். அதனால், திரு. இராஜகோபாலுக்கு ஒரு கடிதம் தந்து நளினியை மதுரைக்கு அனுப்பினேன். திரு. இராஜகோபால் அம்மடலுக்கு மிகுந்த மதிப்பளித்ததுடன், நளினியின் ஓராண்டுப் படிப்பு முழுவதும் அவருக்குத் துணையிருந்தார். விடுமுறைகளின்போது சிராப்பள்ளி வரும்போதெல்லாம் நளினி தம் படிப்பு அநுபவங்களைச் சொல்லி மகிழ்வார். மையத்தின் களஆய்வுகளில் கலந்துகொள்ள முடியாமை அவருக்குத் துன்பம் தந்தபோதும், பல ஊர்களுக்குச் சென்று கல்வெட்டுப் படிக்கும் அநுபவம் அவருக்கு மகிழ்வளித்தது. எங்கள் ஆய்வுகள் பெரும்பாலும் சோழமண்டலத்திலேயே அமைந்திருந்தமையால், பாண்டியநாட்டு வட்டெழுத்துக் கல்வெட்டுகளைப் படிக்கும் அநுபவம் அவருக்குப் புதியதாக அமைந்தது. உழைப்பாற்றலும் நேர்மையும் துணிவும் அவருக்கு அரிய வாய்ப்புகளைத் தந்தன. ஒவ்வொருமுறை சிராப்பள்ளி வரும்போதும் தம் ஆசிரியர் திரு. இராஜகோபாலின் பண்புநலன்களைப் பாராட்டிப் பேசுவார். திரு. இராஜகோபாலுடன் இன்றுவரை எனக்கு நெருக்கமில்லை என்றாலும், மாணவர்களிடம் அவருக்கிருந்த பரிவு, கல்வெட்டாய்வில் அவருக்கிருந்த தேர்ச்சி, அவரது அன்பு மனம் இவை பற்றியெல்லாம் நான் நன்கறியக் காரணமாக இருந்தவர் நளினிதான். திரு. இராஜகோபாலை எப்போது குறிப்பிட்டாலும் என் ஆசிரியர் என்றுதான் சுட்டி மகிழ்வார். பெயர் சொல்ல நேரும்போது 'இராஜகோபால் சார்' என்றுதான் குறிப்பிடுவார். கல்வெட்டாய்வில் அவருக்குக் கிடைத்த அநுபவங்கள் கோயில்கள் சார்ந்த பிற களங்களில் கிடைக்கவில்லை என்பதை அவரது உரைகளே தெரிவிக்கும். பட்டயக்கல்வி கல்வெட்டியல், தொல்லியல் இவை மட்டுமே சார்ந்திருந்தமையால், அவ்விரண்டில் மாணவர்களை தேர்ச்சியுறச் செய்வதே அமைப்பின் குறிக்கோளாய் இருந்தது போலும். நளினி மதுரையில் தங்குதவற்கு என் மனைவி வழி உறவினர் திருமதி மதிவதனி உதவி செய்தார். பாதுகாப்பான தரமான தங்கும் விடுதியொன்று அவரால் பரிந்துரைக்கப்பட்டது. சிராப்பள்ளி வராத வார இறுதிநாட்களில் அவ்வப்போது நளினி அவர்கள் இல்லம் செல்வதுண்டு. கல்விக் காலம் முடிவுற்றதும் பட்டய மாணவர்கள் ஏதேனும் ஒரு கோயிலைத் தேர்ந்து அதை முழுமையான அளவில் ஆய்வுசெய்து ஆய்வேடு தரவேண்டும். சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள பைஞ்ஞீலிக் கோயிலைத் தேர்ந்துகொள்ளுமாறு நளினி அறிவுறுத்தப்பட்டார். பைஞ்ஞீலிக் கோயிலை அதற்கு முன் பார்த்திருந்தபோதும் ஆய்வுசெய்யும் அளவிற்கு அக்கோயிலில் தரவுகள் உள்ளனவா என்பதை அறியும் பொருட்டு நானும் நளினியும் அங்குச் சென்றோம். செல்வதற்கு முன்பே அக்கோயில் பற்றி வந்திருந்த அனைத்துத் தரவுகளையும் சேகரித்துச் சென்றோம். பைஞ்ஞீலிக் கோயிலில் அப்போது திரு. சுந்தரேசன் நிருவாக அலுவலராக இருந்தார். அவர் எங்கள் ஆய்வுகள் பற்றி அறிந்தவராக இருந்தமையால் மிகுந்த மகிழ்வுடன் எங்களை வரவேற்றார். தம் ஆளுமையிலுள்ள கோயிலை ஆய்வுசெய்ய நாங்கள் முடிவுகொண்டமை அவருக்குப் பெருமையளிப்பதாகவும் அனைத்து உதவிகளையும் செய்து தரத் தாம் தயாராக இருப்பதாகவும் கூறியதுடன் கோயில் காவலர் திரு. ஆறுமுகத்தை அழைத்து அறிமுகப்படுத்தினார். எத்தகு உதவி வேண்டுமானாலும் அணுகுமாறு கூறிய அவருடைய துணையும் ஒத்துழைப்பும் பைஞ்ஞீலிக் கோயிலை ஆய்வுசெய்த காலம் முழுவதும் முழுமையாய்க் கிடைத்தன. எத்தனையோ நிருவாக அலுவலர்களை நான் சந்தித்திருந்தபோதும் திரு. சுந்தரேசன் போல் அன்பு கமழ ஆய்விற்குத் துணைநின்றவர்களாக மிகச் சிலரையே குறிப்பிடமுடியும். அவருடைய அன்புள்ளத்தையும் திரு. ஆறுமுகத்தின் உடனிருப்பையும் நம்பியே பலமுறை நளினி அக்கோயிலுக்குத் தனியே சென்று நாள் முழுவதும் அங்கிருந்து கல்வெட்டுகள் வாசித்துள்ளார். திரு. ஆறுமுகம் நளினி வரும் நாட்களில் வேறெங்கும் செல்லமாட்டார். நளினிக்குத் துணையாக நாள் முழுவதும் கோயிலிலேயே இருப்பார். உணவு நேரங்களில் கோயிலில் திருமெழுக்குச் செய்யும் பெண்மணியை நளினிக்குத் துணையாக இருத்திவிட்டுச் செல்வார். நளினியைத் தம் மகள் போலப் பாவித்து அன்பு காட்டிய திரு. ஆறுமுகத்தை சென்ற ஆண்டு சந்தித்தேன். உயர் இரத்த அழுத்தத்தின் காரணமாகப் பேச்சற்ற நிலையில் இருந்தார். என்றாலும், என்னையும் நளினியையும் கண்டதும் அவர் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியைச் சொற்களில் வண்ணிக்கமுடியாது. ஏழ்மையும் செல்வமும் சில மனிதர்களின் பண்புகளை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை. ஆறுமுகம் அத்தகு மனிர்களுள் ஒருவர். ஆறுமுகம் பணியிலிருந்த காலத்தில் பலமுறை பல காரணங்களுக்காக அக்கோயிலுக்குச் சென்றிருக்கிறேன். எப்போதும் ஏதாவது ஒரு பணியைச் செய்து கொண்டிருந்தவராகவே அவரைச் சந்தித்துள்ளேன். வாளா இருப்பது அவருக்குப் பிடிக்காத செயல். இரந்து நிற்பதும் அவர் அறியாத ஒன்று. எப்போதும் சிரித்த முகம். எது கேட்டாலும் செய்து தருவதில் அவருக்கு இணையான வேறொரு காவலர் நான் கண்டதில்லை. பைஞ்ஞீலிக் கோயில் ஆய்வை நாங்கள் விரும்பிச் செய்தமைக்கு ஆறுமுகமும் நிருவாக அலுவலர் திரு. சுந்தரேசனும் இணையான காரணர்களாய் அமைந்தனர். ஏறத்தாழ மூன்றாண்டுகள் (1986-1989) என்னுடன் நளினி பணியாற்றியிருந்தபோதும் பைஞ்ஞீலிப் பயணங்கள்தான் அவரைப் பற்றி நன்கறியும் வாய்ப்பை எனக்கு அளித்தன. முதுகலை ஆய்வின்போது, எவ்வளவோ துணிவூட்டியும் அவர் 'கீழ்ப்படிதலான மாணவி' என்ற நிலையைத் தாண்டி வெளிவரவேயில்லை. முதுநிறைஞர் ஆய்வின்போது ஏறத்தாழ ஓராண்டுக் காலம் முழுமையும் என்னுடன் களப்பணிகளுக்கு வந்தமையால் சற்றே இறுக்கம் தளர்ந்து கேள்விகள் கேட்கும் நிலைக்கு வளர்ந்தார். என்றாலும், அந்தக் கீழ்ப்படிதல் நிலை மாறவில்லை. மதுரைப் படிப்பு அவருக்கு நிரம்பத் துணிவும் தன்னம்பிக்கையும் அளித்திருந்தது. அவருடன் படித்த மற்ற மாணவர்களினும் கோயிற்கலைகளில் அவருக்கிருந்த அநுபவ அறிவு அந்தத் தெம்பை அளித்திருக்கலாம். எங்களுடன் இருந்தபோதே கல்வெட்டுகளைப் படிக்கும் வாய்ப்பு அவருக்குப் பன்முறை வாய்த்திருக்கிறது. திரு. மஜீதுடன் இணைந்து கல்வெட்டுகளைப் படிப்பதில் அவருக்கு ஆர்வமுண்டு. மஜீது ஒரு குழந்தையைப் போல் பழகுபவர் என்பதால், அவரிடம் அனைவருக்குமே நிறைந்த அன்பும் அச்சமின்மையும் இருக்கும். திரு. இராஜகோபாலின் வழிகாட்டலில் கல்வெட்டுகளைப் படிப்பதில் நளினி பெற்றிருந்த தேர்ச்சியைக் களஆய்வுகளில் கண்டபோது எனக்கு வியப்பும் மகிழ்வும் ஏற்பட்டன. முன்னைவிடை விரைவாகவும் சரியாகவும் படிப்பதில் அவர் கண்டிருந்த முன்னேற்றம் அவருடை உழைப்பின் மீது எனக்கிருந்த நம்பிக்கையைப் பெருக்கியது. பைஞ்ஞீலிக் கோயில் அதற்கு முன் பலமுறை ஆய்வு செய்யப்பட்டிருந்தபோதும், நளினியின் களஆய்வுகள்தான் முதன்முறையாக அக்கோயிலின் முழுமையையும் பழைமையையும் வெளிக்கொணர்ந்தன. ஏறத்தாழ இருபதிற்கும் மேற்பட்ட புதிய கல்வெட்டுகள் கிடைத்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது மையக் கோயிலில் கிடைத்த முதலாம் இராஜராஜருடைய கல்வெட்டுதான். அக்கல்வெட்டின் அடிப்படையில் கோயிலின் வயதைச் சற்று முன்னோக்கிக் கொண்டு செல்லும் வாய்ப்பமைந்தது. அன்புடன், இரா. கலைக்கோவன் this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |