http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 56

இதழ் 56
[ ஃபிப்ரவரி 24 - மார்ச் 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

என்று திருந்தும் எங்கள் தமிழ்ச் சமூகம்?
புவனேசுவர விளக்கு
Elephant - The War Machine
திரும்பிப்பார்க்கிறோம் - 28
திருத்தங்கல் குடைவரை
கங்கையின் மறுவீட்டில் - ஒரு நாட்குறிப்பு - 2
தனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 3
அழகி
அவர் - பகுதி 8
Thirumeyyam - 3
Silpi's Corner-08
அவர் இல்லாத இந்த இடம் . . .
வடமொழிக் கல்வெட்டுக்கள் – 1
தசரூபகத்தில் நாட்டியம்
SMS எம்டன் 22-09-1914
இதழ் எண். 56 > இதரவை
வணக்கம் நண்பர்களே,

நலம்தானே?

உங்களுக்கெழுதி மாதங்கள் பல ஆகிவிட்டன. எழுதுவெதென்பது என்ன என்றே மறந்து போய்விட்டது.

நாம் சென்ற பயணங்களும், எழுதிய கட்டுரைகளும், கண்ட காட்சிகளும் கிட்டத்தட்ட பூர்வ ஜென்ம வாசனை போலத்தான் ஒட்டிக் கொண்டிருக்கிறது என நான் நினைத்திருந்த வேளையில், அந்த அதிசயம் நிகழ்ந்தது.

என் புது மனைக்கு அழகு சேர்க்க அங்காடிக்குச் சென்றேன் மனைவியுடன்.

நவீனமான ஷாப்பிங் மால் அல்ல அவ்விடம்.

குறுகலான பாதைகளும், அரையிருள் காட்சிகளும், 'என்ன புக் சார் வேணும்?', 'இராஜராஜன் காசு பாக்றியா சார்?', 'கிட்டப்பா கிராமஃபோன் கிடைக்குமா?' போன்ற பல ஒலிகள் ஒரே சமயத்தில் நம் காதில் விழுந்தும் விழாமல் போகும் இடமது.

உங்களுக்கும் பரிச்சயமான இடமாகத்தான் இருக்கும். சென்னையில் அதிகம் திரியாதவராயினும், குறைந்த பட்சம் கேள்வியேனும் பட்டிருப்பீர்கள்.

பழமையில் வேர்களைத் தேடும் நம் அனைவருக்கும் பிடித்த இடமாகத்தான் இருக்க முடியும் அவ்விடம்.

சரி சரி..போதும் பீடிகை. சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் இருக்கும் 'மூர் மார்க்கெட்'-தான் அவ்விடம்.

வரவேற்பறையில் வழக்கமான பொம்மைகளையும், உபயோகப்படாத பீங்கான் கோப்பைகளையும் வைக்காமல், சற்றே வித்தியாசமான வகையில் ஏதேனும் வைக்கலாம் என்று மூர் மார்க்கெட்டில் உள்ள பழம்பொருள் அங்காடிக்குச் சென்றோம். உடைந்தும், கீறல் விழுந்தும், வண்ணம் உதிர்ந்தும் இருக்கும் பொருட்களுள் பல எங்கள் நெஞ்சை அள்ளின. ஆங்கிலேய ஆட்சியில் கோலோச்சிய தொலைபேசியும், இசையில் தன்னையே தொலைத்து, விரல்களை இறகாக்கி இழைவானில் பறப்பதை அற்புதமாய்ப் படம் பிடித்த உலோக படிமம் ஒன்றையும், பழைய கிராமஃபோனின் நகல் ஒன்றையும், கால்களை மடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் அழகிய வேலைபாடுகள் நிறைந்த மர ஒட்டகமும் வாங்கினோம். அப்போதுதான் அவள் என் கண்ணில் பட்டாள்.

கரியவள். தலை குனிந்தவள். அவளே கைப்பிடி. அவள் கைப்பிடித்திருந்தது ஓர் அன்றலர்ந்த தாமரையை. 7-ஐத் திருப்பிப் போட்டது போன்ற கூரான நாசியும், தெளிவான முத்து மாலையும், எழிலான சரப்பளியும் என்னைச் சுண்டியிழுத்தன.

மாமல்லபுரத்தில் அர்ஜுன ரதத்தில் ஒசிந்து நிற்பவளும், ஸ்ரீநிவாசநல்லூரில் கோட்டச் சுவரில் உறுப்பிழந்தும் செழுப்பழியாது நிற்பவளும் இவளுக்குத் தூரத்து உறவாக இருப்பார்களோ என்றெண்ணி அருகில் சென்று விசாரித்தேன்.

அவர்கள் இவளுக்குப் பல தலைமுறைகள் முன்னால் பிறந்த (இளமை மாறாப்) பாட்டிகளாம்.

அந்த விரல்கள்... அற்புதக் கடக முத்திரையைக் கண்டபோதெல்லாம் காஞ்சி கைலாசநாதர் கோயில் உமையவளின் கடகக்கைகள் நினைவுக்கு வரும். இனி இவள் விரல்களும் நினைவில் வரும். மெத்து மெத்துத் தண்டினை மென்மலரால் பிடித்திருந்த பாங்கைப் பார்த்துப் பல கணங்கள் ஆனபின், என் கண்கள் தோள்களை நோக்கின. இடது தோளை சற்று தூக்கிக்காட்டி, அத்தூக்கலுக்கேற்ப மார்பகங்களும் இடுப்பும் சுழன்றிருக்கும் விதம் அதி அற்புதம். கூர்ந்து நோக்கின் கண்ணுக்குத் தெரியாத வலது தோளும் மனக் கண்ணில் தெரியும்.

அவள் சருமம் கருமையடைந்ததால் white metal என்றெண்ணி அடிமாட்டு விலைக்குக் கொடுத்து, காசை வாங்கிப் பையில் போட்ட கடைக்காரருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. கையில் கிடைத்த கம்பியால் அவள் முதுகைக் கீறினார். கீறிய இடமெல்லாம் மங்கல மஞ்சள். இவ்வளவு கம்மியான விலைக்கு இந்த அழகியை எப்போதும் வாங்க முடியாது என்று அவர் அங்கலாய்த்தவுடன், பிடுங்கிக் கொள்வாரோ என்ற பயத்தில், அவரசர அவசரமாக இடத்தை விட்டு அகன்றோம்.

வீட்டில் வந்து கடை பரப்பி வாங்கியவற்றை அனைவரிடமும் காட்டிய போது, அனைவரின் கவனத்தையும் அவளே கவர்ந்தாள். கந்தசாமி கோயில் அருகில் எடுத்துச் சென்று மெருகேற்றலாம், ஆசிட் வைத்து துடைக்கலாம், விபூதி போட்டுத் துலக்கலாம் என்று எத்தனையோ யோசனைகள். கடைசியில் புளியைப் போட்டுத் தேய்ப்பது என்று முடிவெடுத்தவுடன் அம்மா உடனேயே வேலையில் இறங்கிவிட்டாள். சில நிமிடத்துக்கெல்லாம் அவள் கன்னங்களில் சில பொன் நிறக் கிரணங்கள். அவற்றைக் கண்டவுடனேயே எனக்குக் கைகள் பரபரப்பாகிவிட்டன. தேங்காய் நார், விரல் நகம், ஸ்காட்ச் ப்ரைட், பழைய டூத் ப்ரஷ், அரிசி மாவு, உப்பு, புளி எல்லாம் கொண்டு சில மணி நேரம் கை நோகத் தேய்த்ததும், பல இடங்களில் அவள் உண்மை நிறம் தென்பட்டது. ஒரு கட்டத்துக்கு மேல் என்ன தேய்த்தும் கருமை நீங்குவதாக இல்லை.

எத்தனை ஆண்டு உறவோ? அந்தப் பந்தத்தை அறுக்க எலுமிச்சைதான் உதவியது. இரண்டு நாட்கள் நான்கு பேர் நாற்பது விதமாய் மாறி மாறித் தேய்த்தவுடன் தென்பட்ட அழகில் மாய்ந்துதான் போனோம். விதவிதமாய் மாட்டி, வித்தியாசமான கோணங்களில் கண்டு ரசித்தோம். அவள் நாசியும், உதடுகளும் என்னைக் கட்டிப் போட்டன. அவள் சிரிப்பு சிலர் கண்ணுக்குத் தெரியவில்லை. அவள் சோகம் சிலருக்குப் புரியவில்லை.

கதவைப் பிடித்து இழுக்கப் பயன்படும் ஒரு சாதாரணக் கைப்பிடிக்கா இத்தனை அழகு? எப்பேர்ப்பட்ட ரசிகனின் கருத்தில் விளைந்த கவிதை அந்தக் கைப்பிடி! கைப்பிடியே இப்படியெனில் கதவு எப்படி இருந்திருக்கும்? கதவு இப்படி எனில், அக்கதவு இருந்த வீடோ கோயிலோ எப்படி இருந்திருக்கும் என்றெல்லாம் எண்ணிக் களித்தோம்.

அவளை வெளியில் எடுத்துச் சென்று சூரியனுடன் உறவாட விட்டவுடன் அவள் பொன்னைப் பழிக்கும் விதமாய்ப் பளபளக்க ஆரம்பித்தாள். அவளைக் கதவில், சுவரில், மரத்தில், பைப்பில் என்று கண்ட இடத்தில் எல்லாம் மாட்டி, விதவிதமாய்ப் படம்பிடிக்கவே வார இறுதி சரியாய்ப் போயிற்று.

அவளைத் தாங்கவும், தடவவும், கொஞ்சவும்தான் எத்தனை போட்டி? அவள், அது, சிற்பம், bronze என்றெல்லாம் ஆளுக்கொரு வகையாய் அழைக்க, 'ஒரு அழகான பேராகப் பார்த்து வைக்க வேண்டும்' என்றாள் அம்மா. அம்மா சொன்ன வாக்கியமே எனக்கு அவள் பெயரைக் காட்டிக் கொடுத்தது. 'அழகி' என்று பெயரிட்டு மகிழ்ந்தோம்.

'சங்ககாலக் கல்வெட்டு', 'தமிழ் பிராமி நடுகல்', 'ஆயிரக்கணக்கில் கல்வெட்டுகள்', 'அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட அழகுப் பெட்டகங்கள்', என்றெல்லாம் கண்டுபிடித்தும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பவரிடையில், ஒரு கைப்பிடி, அதுவும் தொன்மை வாய்ந்ததென்று சொல்லிவிட முடியாது. "இதைக் கண்டு பிடித்ததற்கா இப்படிக் குதிக்கிறாய்?", என்றுதானே கேட்கிறீர்கள்.

அவளை நேற்று வார்ப்பில் இட்டு எடுத்தாய்த்தான் இருக்கட்டுமே? அவளிடம் அழகில்லையா என்ன? உங்களுக்கெப்படித் தெரியும்? பாவம், நீங்கள்தான் அவளைப் பார்த்ததில்லையே.

நான் கண்டெடுத்த அவள் இதோ உங்களுக்காக நிழல் வடிவில்...

பார்த்து மகிழுங்கள்.

அன்புடன்,
ராம்.

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.