http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 56

இதழ் 56
[ ஃபிப்ரவரி 24 - மார்ச் 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

என்று திருந்தும் எங்கள் தமிழ்ச் சமூகம்?
புவனேசுவர விளக்கு
Elephant - The War Machine
திரும்பிப்பார்க்கிறோம் - 28
திருத்தங்கல் குடைவரை
கங்கையின் மறுவீட்டில் - ஒரு நாட்குறிப்பு - 2
தனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 3
அழகி
அவர் - பகுதி 8
Thirumeyyam - 3
Silpi's Corner-08
அவர் இல்லாத இந்த இடம் . . .
வடமொழிக் கல்வெட்டுக்கள் – 1
தசரூபகத்தில் நாட்டியம்
SMS எம்டன் 22-09-1914
இதழ் எண். 56 > தலையங்கம்
என்று திருந்தும் எங்கள் தமிழ்ச் சமூகம்?
ஆசிரியர் குழு

வாசகர்களுக்கு வணக்கம்.

கடந்தமாதத்தைப்போலவே இந்தமாதமும் வரலாறு.காம் சிறிது தாமதமாகத்தான் வெளியாகிறது. அனைவருக்கும் ஏற்பட்ட பணிச்சுமைதான் காரணம். இந்த ஒருமாத காலத்தில் பல்வேறு மகிழ்ச்சியான செய்திகளும் நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளன. அதேசமயத்தில் வருந்தவைக்கும் நிகழ்வுகளுக்கும் பஞ்சமில்லை. சோக நிகழ்வுகளின் மத்தியில் ஒளிக்கீற்றாய்த் தெரியும் நற்செய்திகளும் மகிழ்ச்சிக்கடலில் நீந்தும்போது இடர்ப்படும் துயரங்களும் உலகவாழ்வில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் பொதுவானவை.

சென்ற ஆண்டின் பிற்பகுதியிலிருந்தே நாங்கள் ஓரளவு எதிர்பார்த்திருந்த செய்திதான் இது. ஜனவரி 25 அன்று தமிழ்த் தொலைக்காட்சிகள் இரவுச் செய்திகளில் ஐஸ்வர்யா ராயும் விவேக்கும் பத்ம விருதுகள் பெற்றதை அறிவித்தபோது சற்று ஏமாந்துதான் போனோம். இந்த வருடமும் வரலாற்றுக்கோ தமிழ்நாட்டு வரலாற்றறிஞர்களுக்கோ ஏதும் அளிக்கவில்லையே என்று வருந்தினோம். அவ்வருத்தத்தை, அடுத்த நாளைய தினமணி போக்கியது. கல்வெட்டறிஞரும் தினமணி முன்னாள் ஆசிரியருமான திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. நமது தொலைக்காட்சிகளின் தமிழ்ப்பற்றைப் பாராட்டத் தோன்றியது. ஆகஸ்ட் மாதம் ஐராவதி வெளியீட்டு விழாவில் தமிழக அரசு விருது ஒன்றுக்கு மகாதேவன் பெயரைப் பரிந்துரைத்துத் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால் காலம் அவருக்கு அதைவிடப் பெரிய விருதைப் பெற்றுத் தந்திருக்கிறது. இவ்விருதுக்கு மகாதேவனைப் பரிந்துரைத்த அந்த நல்ல உள்ளத்திற்கும் அதை நடுவண் அரசுக்கு அனுப்ப ஒப்புதல் அளித்த தமிழக அரசுக்கும் வரலாறு.காம் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஒரு வரலாற்றறிஞர் தான் வாழும் காலத்திலேயே கவுரவிக்கப்படுவது மிகவும் அரிது. வெகுசிலருக்கே அந்தப்பேறு கிடைத்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு கூ.இரா.சீனிவாசன் அவர்களுக்குப் பத்மபூஷண் விருது வழங்கப்பட்டபிறகு, தமிழக வரலாற்றுத்துறையின்மீது விருதுக்குழுவின் கருணைப்பார்வை படவே இல்லை. இதில் சில தமிழக வரலாற்றாய்வாளர்களின் அரசியலும் சிறிது கலந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் மகாதேவன் அவர்கள் இத்தகு அரசியல் விளையாட்டுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். சிந்துசமவெளி ஆய்வை முடித்தபோதோ அல்லது Early Tamil Epigraphy நூலை வெளியிட்டபோதோ கிடைத்திருக்க வேண்டியது சற்றுக் காலம் தாழ்த்திக் கிடைத்திருக்கிறது. விருது என்பது பெறுவதல்ல; வாங்குவது என்ற வழக்கமாகி விட்டிருக்கும் இக்காலத்தில் ஏதேதோ இலாப நோக்கங்களைக் கருத்தில்கொண்டு, சாதாரணமானவர்களுக்கெல்லாம் பத்ம விருதுகளை அள்ளிக் கொடுக்கும் சூழ்நிலையில், எந்தவிதத் தன்முயற்சியும் செய்யாமல், விருதுக்கு முன்பும் பின்பும் ஒரே மனநிலையில் இருக்கும் மேதை ஒருவரிடம் சேர்ந்து, தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டுள்ளது பத்மஸ்ரீ விருது. இதற்கு வாழ்த்துத் தெரிவித்து வணங்க வேண்டியது வரலாற்றை நேசிக்கும் ஒவ்வொருவரின் கடமை.

விருதுக்காக உவகை கொள்ளும் இவ்வேளையில், ஒரு தீராத் துயரம் வந்து நெஞ்சை அழுத்துகிறது. ஈழத்தில் இதுநாள்வரை போரின் பெயரால் கொல்லப்பட்டு வந்த நம் உடன்பிறப்புக்கள் இன்று வஞ்சகமாகக் கொல்லப்படுகிறார்கள். பாதுகாப்பு வளையம் என்ற பெயரில் மக்களை ஓரிடத்தில் குவித்து, ஒட்டுமொத்தமாகக் கொல்லும் அரச பயங்கரவாதத்தை இந்தியா உட்பட உலகநாடுகள் எதுவும் கண்டிப்பதாக இல்லை. எல்லோரையும் கொன்றுவிட்டு, யாருக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. குருதிப்புனல் திரைப்படத்தில் வரும் வசனத்தைப்போல, போராளிகள் பேசினால் உரக்கக் கேட்பதில்லை; அரசாங்கம் பேசினால் உலகுக்கே கேட்கிறது; அது உண்மையாக இல்லாவிட்டாலும்கூட. காரணம், போராளிகள் யாரும் பத்திரிகையாளர்களுக்கு விருதுகளும் பரிசுகளும் கொடுப்பதில்லை. அவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் ஓரிருவராயினும், கிரிக்கெட் விளையாட்டின் சப்தம் அவற்றை அடக்கிவிடுகிறது.

வரலாற்றைச் சற்றுத் திரும்பிப் பாருங்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் வரலாறு மட்டுமல்ல. நேற்று நடந்ததற்குப் பெயரும் வரலாறுதான். இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட முடியாது என்று கூறுபவர்களுக்கு, பாகிஸ்தானின் உள்விவகாரங்களில் தலையிட்டு பங்களாதேஷை உருவாக்கிய வரலாறு மறந்துவிட்டது போலும். இதற்கெல்லாம் காரணம் சரித்திரப் புகழ்பெற்ற தமிழர்களின் ஒற்றுமையின்மைதான். சீக்கியர்களுக்கு இருந்த ஒற்றுமை தமிழர்களுக்கு இருந்திருந்தால், இந்தியா என்றைக்கோ இலங்கை விவகாரத்தில் தலையிட்டு, ஒரு தீர்வு ஏற்பட வழிவகுத்திருக்கும். இந்திராகாந்தியை பியாந்த்சிங் கொன்றபோது சீக்கியர்களுக்கெதிராகப் பல வன்முறைகள் அரங்கேறி, தேசவிரோத சமுதாயம் என்று அரசால் மறைமுகமாக முத்திரை குத்தப்பட்டது. இதேபோன்றதொரு அரச பயங்கரவாதம் அன்றும் நிகழ்த்தப்பட்டது. ஆனால் அடுத்த தேர்தலில் பியாந்த்சிங்கின் மனைவி பல இலட்சங்கள் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது, அவர்களின் ஒற்றுமையினால் விளையும் ஓட்டுவங்கியை மனதில்கொண்டு அச்சமூகத்தை அரசியல் கட்சிகள் அரவணைத்துக் கொண்டது அழிக்க முடியாத இந்திய வரலாற்றின் முக்கியமான ஒருபகுதி. அதன் விளைவு இன்று சீக்கியர் ஒருவர் நம் நாட்டின் பிரதமர். அந்த ஒற்றுமை தமிழர்களுக்கு இருக்கிறதா? சொந்தச் சகோதரர்கள் கொல்லப்படுவதையே நியாயம் என்று கூறும் ஒரே சமுதாயம் உலகிலேயே தமிழ்ச் சமுதாயமாகத்தான் இருக்கமுடியும்.

இந்தத் துயரத்திலும் நம்பிக்கை கண்சிமிட்டும் ஓர் ஒளிக்கீற்றுதான் இன்று தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்ச்சி. பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஈழத்தமிழர்களுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கும் போக்கு மனதில் சற்றே நிம்மதியை ஏற்படுத்துகிறது. தமிழர்களுக்கு எதிரானவர்களைக் க(த)ண்டிக்கும் போக்கும் வளர்ந்திருக்கிறது. பல வருடங்களாகத் தமிழர்களின் நெஞ்சங்களில் கனன்றுகொண்டிருந்த கனலை ஓர் இளைஞனின் தற்கொடை பற்றவைத்திருக்கிறது. தற்கொலை கோழைத்தனமானதுதான் என்றாலும்கூட, முத்துக்குமாரின் மரணம் அவசரப்பட்டு எடுக்கப்பட்ட முடிவாகத் தெரியவில்லை. ஆழமாகச் சிந்தித்துச் சுயநினைவுடன் எடுக்கப்பட்ட தீர்மானமாகத்தான் தெரிகிறது. அதனால்தான் அதற்கு இத்தனை வலிமை போலும். சில நேரங்களில் சில மனிதர்களின் இருப்பு ஏற்படுத்தாத பாதிப்புகளை அவர்களின் மரணம் ஏற்படுத்திவிடுகிறது. தமிழக வரலாற்றில் கோவலனுக்கு முன்பும் பின்பும் பல உதாரணங்களை இதற்குக் காட்டமுடியும். ஆனால் எல்லா மனிதர்களின் மரணங்களும் சரித்திரமாகி விடுவதில்லை. ஓரிரு விதிவிலக்குகளை வைத்துத் தற்கொலைகளை நியாயப்படுத்தவும் முடியாது. முத்துக்குமாரின் மரணத்தைவிட அவனது எழுத்துக்கள்தான் அதிகம் பேசப்படுகின்றன. உயிருடன் இருந்து பேசியிருந்தாலும் கிடைக்காத ஒரு முக்கியத்துவத்தை அவனது மரணம் தந்திருக்கிறது. ஆனால் தமிழர்களின் இந்த உணர்ச்சிக்கனல் தொடர்ந்து எரியுமா? அல்லது தமிழின விரோதிகளால் திசை திருப்பப்படுமா? காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

விருதுகளிலும் சரி, வேறுநாட்டு விவகாரங்களிலும் சரி. தமிழர்களை முன்னேற விடாமல் செய்யும் இந்த ஒற்றுமையின்மையை ஒழிக்கவே முடியாதா? அல்லது இது தலைமுறைகளாகத் தொடரும் சாபக்கேடா? வரலாறு எத்தனை முறை திரும்பினாலும் நமக்குப் புரியாதா? அல்லது புரிந்தும் புரியாததுபோல் நடிக்கிறோமா? வரலாற்றிலிருந்து என்றைக்குப் பாடம் கற்றுக்கொள்வான் தமிழன்? சொல்லுங்கள் வாசகர்களே!!

அன்புடன்
ஆசிரியர் குழு
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.