![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 56
![]() இதழ் 56 [ ஃபிப்ரவரி 24 - மார்ச் 15, 2009 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
குடைவரைகள்
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் சிவகாசி சாலையில் சிவகாசியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருத்தங்கல். இவ்வூரின் குன்றில் தென்பார்வையாகப் பெருமாளுக்கு ஒரு குடைவரையும் சற்றுத் தள்ளிய நிலையில் பாறைச் செதுக்கலாகக் கொற்றவைத் தொகுதியொன்றும் காணப்படுகின்றன. அறநிலையத்துறையின் ஆட்சியிலுள்ள நின்ற நாராயண பெருமாள் கோயில் வளாகத்துள் இணைத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குடைவரையும் தனியார் ஒருவரின் பாதுகாப்பின் கீழ்க் கொற்றவைத் தொகுதியும் உள்ளன. இரண்டு கோயில்களிலுமே வழிபாடு நடக்கிறது. குடைவரை நின்ற நாராயண பெருமாள் கோயில் வளாகத்தின் மேற்குப்புறத்தே நிருவாக அலுவலரின் அறைக்கருகே தென்பார்வையாய் அமைந்துள்ள ரங்கநாதர் திருமுன்னே பழங்குடைவரையை உள்ளடக்கியுள்ளது. குடைவரையின் முன் பின்னாளில் இணைக்கப்பட்டுள்ள செவ்வக மண்டபத்தை சதுரம், கட்டு, சதுரம் என்ற அமைப்பிலான எட்டுத் தூண்கள் தாங்குகின்றன. அவற்றின் மேலுள்ள வெட்டுப் போதிகைகள் உத்திரம் தாங்க, மேலே வாஜனம், வலபி இவற்றுடன் கூரை. இம்மண்டபத்தின் வடபுறத்தே முகப்பு, முகமண்டபம், கருவறை என்ற அமைப்பில் குடைவரை உள்ளது. முகப்பு கிழக்கு மேற்காக 4.94 மீ. நீளமும் தென்வடலாக 74 செ. மீ. அகலமும் 2 மீ. உயரமும் பெற்றுள்ள முகப்பின் நடுவில் இரண்டு முழுத்தூண்களும் பக்கங்களில் இரண்டு அரைத்தூண்களும் சதுரம், நீளமான கட்டு என்ற அமைப்பில் காணப்படுகின்றன. சதுரங்களின் நான்கு மூலைகளிலும் கட்டைத் தழுவினாற் போல் கூம்பு போன்ற அலங்கரிப்பு உள்ளது. கட்டுகளின் மேல் அமர்ந்துள்ள போதிகைகள் விரிகோணக் கைகளால் உத்திரம் தாங்க, மேலே வாஜனம். போதிகைக் கைகளில் கீழ்க்கை பேரளவினதாக அமைய, மேற்கை மடிப்புடன் உத்திரம் தொடுகிறது. வாஜனத்தையடுத்து 67 செ. மீ. அளவிற்குச் சரிவாகக் கீழிறங்கும் கூரை கீழ்ப்புறம் மடிப்புப் பெற்றுள்ளது. கபோத அலங்கரிப்புகளைக் காணக்கூடவில்லை. இக்கூரையுடன் முன்னால் உள்ள மண்டபத்தின் கூரை நன்கு பொருந்துமாறு இணைக்கப்பட்டுள்ளது. ![]() உத்திரத்திற்கும் கூரைக்கும் இடையிலுள்ள வாஜனம் அரைத்தூண்களையடுத்து சதுரப்பட்டியென இருபுறத்தும் தரைவரை இறக்கப்பட்டுள்ளது. அது போலவே கபோத விளிம்பிலிருந்தும் இருபுறத்தும் இரண்டு நான்முக அரைத்தூண்கள் தரைவரை இறக்கப்பட்டுள்ளன. முன்னாலுள்ள மண்டபத்திற்கும் முகப்பிற்கும் இடையிலுள்ள தரை கிழக்கு மேற்காக 4. 92 மீ. நீளமும் தென்வடலாக 65 செ. மீ. அகலமும் பெற்றுள்ளது. பின்னாளைய திருப்பணியின் காரணமாக முன்னுள்ள தரையும், முகப்புத் தரையும் முகப்பையடுத்துள்ள முகமண்டபத் தரையும் சலவைக்கற்கள் போர்த்தப்பட்டு ஒரே தள அமைப்பாக மாற்றப்பட்டுள்ளன. முகமண்டபம் முகப்பை அடுத்துள்ள முகமண்டபம் கிழக்கு மேற்காக 5.83 மீ. நீளமும் தென்வடலாக 2. 09 மீ. அகலமும் 2. 21 மீ. உயரமும் கொண்டமைந்துள்ளது. மண்டபத்தின் சுவர்களும் தரையும் சலவைக்கற்களால் மூடப்பட்டுள்ளன. உத்திரம், வாஜனம் இவற்றால் முப்புறத்தும் அணைக்கப்பட்டுள்ள இம்மண்டபத்தின் பின்சுவரில் மேற்கில் 41 செ. மீ. அளவிற்கும் கிழக்கில் 45 செ. மீ. அளவிற்கும் மண்டபத்திற்குள் பிதுக்கமாக இருக்குமாறு 4. 14 மீ. அகல, 2. 19 மீ. உயரக் கருவறை குடையப்பட்டுள்ளது. கருவறையின் முன்சுவரை அதன் கீழ்ப்புறத்தே காட்டப்பட்டுள்ள உபானத்திலிருந்து எழும் நான்கு உறுப்பு வேறுபாடற்ற அரைத்தூண்கள் அணைத்துள்ளன. இத்தூண்களின் மேல் உத்திரம், வாஜனம் இவை கூரையுறுப்புகளாக அமர்ந்துள்ளன. நடு அரைத்தூண்களுக்கு இடைப்பட்ட சுவர்ப்பகுதி 77 செ. மீ. அகல, 1. 89 மீ. உயர வாயிலாக்கப்பட்டுள்ளது. வாயிலின் முன் படிக்கட்டுகளோ, சுவரின் கீழ்ப்பகுதியில் தாங்குதள அமைப்போ காணுமாறு இல்லை. வாயிலை ஒட்டியுள்ள மேல், கீழ் நிலைகள் பின்னாளில் இணைக்கப்பட்டுள்ளன. கருவறை உட்புறத்தே கிழக்கு மேற்காக 2. 02 மீ. அளவும், தென்வடலாக 2. 16 மீ. அளவும் 2. 08 மீ. உயரமும் கொண்டுள்ள கருவறையில் அதன் பின்சுவரையொட்டிக் காணப்படும் 53 செ. மீ. உயரப் பாம்பணையில் தெற்கு நோக்கி ஒருக்கணித்தவராக மேற்கில் தலைவைத்துக் கிழக்கில் திருவடிகள் நீட்டிப் படுத்துள்ளார் ரங்கநாதர்.கருவறையின் சுவர்களில் முப்புறத்தும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பேரளவினதாக தாமரை மலரொன்று வரையப்பட்டுள்ள கூரையை ஒட்டி நாற்புறத்தும் உத்திரம், வாஜனம் உள்ளன. தென்சுவர், கருவறை வாயிலையொட்டிய நிலையில் இருபுறத்தும் அரைவட்ட வடிவம் கொண்டுள்ளது. ![]() பாம்பணையின் அருகே மேற்கிலும் கிழக்கிலும் பக்கத்திற்கொன்றாகச் சிறிய அளவிலான முனிவர் வடிவங்கள் இலலிதாசனத்தில் உள்ளன. தாடியும் சடைமகுடமும் பெற்றுள்ள அவர்தம் கைகளுள் ஒன்று சின்முத்திரை காட்ட, மற்றொன்றில் சுவடி உள்ளது. இவ்விருவருக்கும் இடையில் பெருமாளும் அவர் வலப்புறத்தே திருமகள், இடப்புறத்தே நிலமகள் இவர்தம் செப்புத்திருமேனிகளும் காணப்படுகின்றன. ஒன்றன் பின் ஒன்றாய்க் காட்டப்பட்டுள்ள இரண்டு தலையணைகளில் கிரீடமகுடம் சுமக்கும் தம் தலையைச் சாய்த்து ஒருக்கணித்துள்ள ரங்கநாதரின் வலக்கை முழங்கை அளவில் மடிந்து நீளமான கீழ்த் தலையணைமீது இருத்தப்பட்டுள்ளது. இடக்கையைக் காணக்கூடவில்லை. தலைக்கு மேலே சுதையாலான ஆதிசேடனின் ஐந்து தலைகள் குடை போல அமைந்துள்ளன. சுதையும் வண்ணமும் பூசப்பட்ட நிலையில் ரங்கநாதரின் திருமேனி அலங்கரிப்புகளுள் எது பழைமையானது என்பதை அறியக்கூடவில்லை. உதரபந்தமும் முப்புரிநூலும் மகரகுண்டலங்களும் பெற்றுள்ளார். இடையிலிருந்து நீளும் பட்டாடை கணுக்கால்கள்வரை நீள்கிறது. பாதங்கள் இரண்டும் தெற்கு நோக்கித் திருப்பப்பட்டுள்ளன. இப்பாதங்களின் பின்னிருக்குமாறு திருமகளும் நிலமகளும் மிகச் சிறிய வடிவினராய் அமர்த்தப்பட்டுள்ளனர். இருவருமே முனிவர்களைப் போல் பின்னாளைய சுதையிணைப்புகள். கூரையைப் போலவே கருவறையின் மேற்குக் கிழக்குச் சுவர்களிலும் பின்சுவரிலும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பின்சுவரில் நான்முகன் சிறிய அளவிலான சுதைவடிவமாய்க் காட்டப்பட்டுள்ளார். பெருமாளின் தொப்புள் கொடியிலிருந்து வந்தவர் என்பதைக் காட்டுமாறு போல அவர் இருக்கையான தாமரையிலிருந்து நீளும் தண்டு பெருமாள் திருமேனிவரை பயணப்பட்டுள்ளது. நான்முகனின் முன்கைகள் காப்பு, அருள் முத்திரைகளில் அமைய, பின்கைக் கருவிகளை அடையாளம் காணக்கூடவில்லை. நான்முகனின் வலப்புறம் இரண்டு ஆடவர் வடிவங்களும் இடப்புறம் இரண்டு ஆடவர் வடிவங்களும் வரையப்பட்டுள்ளன. ஒன்று போல் காணப்படும் இந்நான்கு ஓவியங்களும் பெருமாளின் நான்கு கருவிகளைச் சுட்டுகின்றன என்பதை உணர்த்த முதல் ஆடவர் அருகே கதையையும் இரண்டாமவர் அருகே கத்தியையும் மூன்றாம், நான்காம் ஆடவர்கள் அருகே சக்கரம், சங்கு இவற்றையும் வரைந்துள்ளனர். நால்வருமே கீழ்ப்பாய்ச்சிய பட்டாடைகள் அணிந்து, கைகளை வணக்கமுத்திரையில் கொண்டுள்ளனர். கிழக்குச் சுவரில் வலமிருந்து இடமாகத் தும்புரு, சிவபெருமான், ஆஞ்சநேயர் உருவங்கள் வரையப்பட்டுள்ளன. குதிரை முகத்துடன் உள்ள தும்புருவின் வலக்கை தோளில் மாட்டியிருக்கும் வீணையை மீட்ட, உயர்ந்துள்ள இடக்கையில் சப்ளாக்கட்டை. பின்கைகளில் மானும் மழுவும் கொண்டுள்ள சிவபெருமானின் முன்கைகள் வணக்க முத்திரையில் உள்ளன. இடுப்பில் சிற்றாடையுடன் வடக்குப் பார்வையாக ஒருக்கணித்துள்ள ஆஞ்சநேயரின் கைகளும் வணங்கிய நிலையில் உள்ளன. மேற்குச் சுவரில் வலமிருந்து இடமாக நாரதர், நான்முகன், கருடன் இவர்களின் ஓவியங்கள் காணப்படுகின்றன. நாரதரின் வலக்கை வீணை மீட்ட, இடக்கையில் சப்ளாக்கட்டை. நான்முகன் முன்கைகளால் வணங்கியவாறே பின்கைளில் தம் கருவிகளான குண்டிகையும் அக்கமாலையும் கொண்டு காட்சிதருகிறார். கருடனின் இடைச் சிற்றாடையைப் படமெடுத்துள்ள பாம்பு அணைத்துள்ளது. கைகள் வணக்க முத்திரையில் உள்ளன. கருவறை கிழக்கு, மேற்குச் சுவர்கள் வடசுவரைத் தொடுமிடத்து இருபுறத்தும் பக்கத்திற்கொன்றாக இரண்டு மரங்கள் வரையப்பட்டுள்ளன. கொற்றவைத் தொகுதி நின்ற நாராயண பெருமாள் கோயில் வளாகத்திற்கு மேற்கே சற்றுத் தொலைவில், குடைவரை அமைந்துள்ள அதே குன்றின் ஒரு பகுதியில் தென்பார்வையாகக் கொற்றவைத் தொகுதி செதுக்கப்பட்டுள்ளது. 1. 46 மீ. உயரம், 1. 64 மீ. அகலம் கொண்டு அமைந்துள்ள இத்தொகுதியின் நாயகியாகக் கொற்றவை அமைந்துள்ளார். பின் கைகளில் வலப்புறத்தே சக்கரமும் இடப்புறத்தே சங்கும் கொண்டு சமபாத நிலையில் காட்சிதரும் கொற்றவையின் வல முன் கை உடைந்துள்ளது. இட முன் கை கடியவலம்பிதமாக அமைய, இடையில் இடைக்கட்டுடனான பட்டாடை. திருவடிகளின் கீழே பாறை சிதைந்துள்ளதால் மகிடத்தின் தலையைக் காணக்கூடவில்லை. ஆனால், அதன் கொம்புகள் இருபுறத்தும் வளைந்து திரும்புவதைக் காணமுடிகிறது. கொற்றவையின் மார்பகங்களைக் கச்சு மறைத்துள்ளது. ![]() தேவியின் தலையை அடுத்து வலப்புறத்தே சிம்மமும் இடப்புறத்தே மானும் காட்டப்பட்டுள்ளன. இருபுறத்தும் பக்கத்திற்கொருவராக இரண்டு வானவர்கள் ஒரு கையைப் போற்றி முத்திரையிலும் மற்றொரு கையை மார்பருகே கொண்ட நிலையிலும் காட்சிதருகின்றனர். இறைவியின் கால்களை அடுத்து வலப்புறத்தே இரண்டு ஆடவர் வடிவங்களும் இடப்புறத்தே இரண்டு ஆடவர் வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. கால்களை ஒட்டி அமைந்துள்ளவர்களுள் பனையோலைக் குண்டலங்கள் அணிந்துள்ள மேற்கர் தலைப்பலி தருபவராகக் காட்டப்பட்டுள்ளார். கத்தியேந்திய அவரது வலக்கை கழுத்தை அறுக்கும் மெய்ப்பாட்டில் அமைய, இடக்கை தலைமுடியைப் பிடித்துள்ளது. இடுப்பிற்குக் கீழ் உள்ள பகுதி முற்றிலுமாய்ச் சிதைந்துள்ளது. கருடாசனத்தில் உள்ள கிழக்கரின் இடக்கை சிதைந்துள்ளது. மார்பருகே உள்ள வலக்கையில் காணப்படும் பொருள் மலர் மொட்டாகலாம். அடுத்து அமர்ந்துள்ள ஆடவர்கள் இருவருமே நேர்ப்பார்வையில் உள்ளனர். சிற்றரசர்கள் போல் காட்சிதரும் அவர்களுள் மேற்கர் இருகால்களையும் குறுக்கீடு செய்து அமர்ந்துள்ளார். வலக்கை மார்பருகே கடகமாய் அமைய, இடக்கை இடமுழங்காலின் மீது இருத்தப்பட்டுள்ளது. இருபுறத்தும் சடைக்கற்றைகள் பெற்றுள்ள அவரது தலையை மகுடம் ஒன்று அலங்கரிக்கிறது. அதே அமைப்பிலுள்ள கிழக்கரின் மார்பு, கைகள், கால்கள் சிதைந்துள்ளன. காலம் குடைவரையும் கொற்றவைத் தொகுதியும் கி. பி. எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தனவாகலாம். this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |